தீக்குளித்தால் தான் சீதைகள்..!!

முன்னால் நின்றது

மாரீசனின் மானல்ல

மயங்கி நீர்

அண்ணலை விட்டு

ஆரணங்காகி

அணிவகுக்க..

தாயக

விடுதலைக் கனவே

உம்மை அங்கு அணிவகுத்தது..!

 

தந்தை செல்வா சொல்லி

தந்தை பெரியார் வாழ்த்தி

கலைஞர் தலையாட்டி

எம் ஜி ஆர் கரம் நீட்டி

அமிர்தலிங்கம் வெற்றித் திலகமிட

யோகேஸ்வரன் கேட்ட இடத்தில்

அணிவகுத்த

இளைஞர் கூட்டத்தின் வழி

நீவிர் நின்றீர்

அண்ணன் பாதையில்

கொள்கை காத்து..!

 

களங்கள் பல கண்டீர்

இந்திய

வானரப்படைகளென்ன

கொடும்

சிங்கள பேரினப்படைகளும்

கண்டீர்.

போதாதேன்று

இலக்கிய காலமே

கண்டிராத

அமெரிக்கக் கழுகுகளும்

இஸ்ரேல் வல்லூறுகளும்

கூடவே…

சீன ரகன்களும்

பாகிஸ்தானியப் பிறைகளும்

ரஷ்சிய அரிவாள்களும்

உம் முன்

மல்லுக்கட்டக் கண்டீர்.

 

எல்லாம் வென்று

வெற்றித் திருநாள்

வரும்…

வன வாசம் முடித்து

நாடு மீளும் நாள்

வரும்..

மங்கையர் நீர்

குப்பி மிஞ்சி

மங்கள நாண் தரித்தீர்

வேளை வரும்..

தாயக விடியலோடு

வாழ்வும்

வசந்தமும் வருமென்றே..!

 

கூனிகளின் குந்திகளின்

சூழ்ச்சிகள்

தலைவிதிகள் மாற்றிப் போட…

தோள்கொடுத்தோர்

தலையாட்டிகளாய்

மாறி விட

தரித்திரமானது

தேசம்..!!

முள்ளிவாய்க்காலில்

இனவெறி

அரக்கர் தம்

கரங்களில்

கை சேர்ந்தீர்

எம் கண்மணிகளே..!

 

ஹிந்திய சீதைக்கு

ஓர்..

சோலை வனம்

அழகு வனம்

அமைதி வனம்

தந்தவன்

இராவணன்..!

மங்கை மனம்

தானாய் இசையும் வரை

விரல் நுனிதனும்

அவள் மேனி

தொட்டிடா..

கொள்கை கொண்டவன் அவன்..!

இலக்கிய காலத்து

ஆணின் அடையாளம்..!

 

தமிழீழச் செல்வங்களே

எங்கள் தேசத்துச்

சீர்திருத்தச் சீதைகளே

உங்கள் சிறை..

அசோக வனங்கள் அல்ல

அகோர வனங்கள்..!

 

மார் திருகும் கரங்களும்

கற்புத் தின்னும்

சிங்களப் பிசாசுகளும்

பெண் உடல் ரசிக்கும்

சொந்த இனக் கூலிகளும்

கும்மாளமிட்ட

இடம்…

நீங்கள் இருந்த

அசோக வனங்கள்..!

பேரினமும்

வல்லாதிக்கமும்

மாற்றுக்கருத்தும்…

போதையூட்டி வளர்த்த

நவகால நரமாமிச

முண்டங்கள் அவை..!

கலிகாலத்து

ஆண்களின் அடையாளம்..!

 

உதவி கோரும்

உங்கள்..

கூக்குரல் தனும்

கேட்டிடா

செவி இறுக்கி

கூனி நின்று

கூத்தாடி மகிழும்

சொந்த இனம்

இன்னொரு பக்கம்..!!

 

சீதைகளே

நீவிர் இன்று

அகோரவனம் மீண்டு

சமூக வனத்தில்

தடம் பதித்தாலும்..

சோதனைகள் உம்மை

துரத்திட்டாலும்

தற்கொலைகள் உம்மை

தாலாட்டி அழைத்திட்டாலும்..

தீக்குளிக்காமல்

தீண்டமாட்டுது

எம் தமிழ் சமூகம்

இலக்கிய காலத்து

கொள்கை காத்து..!

 

தீக்குளிக்க

காத்து நிற்கும்

உங்கள் நீண்ட

வரிசை கண்டு..

அதில் கொடுமை

காணாது எம் கண்கள்

நவ காலத்தின்

நவீன நாசியமாய்

எம்

தமிழ் மண்ணில்

அவை இன்று..!

ஹிட்லரிலும்

கேடாய்

நம்

மனச்சாட்சி..!

அதுதான் உண்மை..!

 

சுயநலத்தால்

உம்மேல்

பழியிட்டு

குழியிட்டு

புதைத்து விட்டு

தொலைத்து விட்டு

மாவீரர் ஆக்கி

மகிழ்ந்திடுவோம்

நவம்பர் 27 இல்..!

 

விடுதலையும்

வீரமும்

எங்கே..?!

அங்கே…

எம்மை

இதமாய்

தழுவிக் கொள்கிறது

அடிமையும்

அசைலமும்..!

பின்னூட்டமொன்றை இடுக