Archive for ஒக்ரோபர், 2012

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!

எங்களுக்கும்
ஆயிரம் ஆசைகள் உண்டு..
அதில்
கட்டுநாயக்கா போய்
கடல் கடந்து
அந்நியப்பட்டு
அந்நிய தேசத்தில்
கடவுச்சீட்டொன்றில்
வதிவிடம் வாங்கி
களித்துப் பின்
கலியாணம் கட்டி
இசைஞானியின்
காதல் இசையில்
கருத்தால் மயங்கி
கலவி செய்து
கலந்திப்பதும் ஒன்று…!

ஆனாலும்
கால்கள் நகர மறுத்தன.
காலம்
தடுத்து நிறுத்தின.
அன்னை தேசம்
அடிமை விலங்கு தாங்கி
அழுது புலம்பும் நிலை
அனுதினமும் அமைதி குலைத்தது…!

கழுத்தில்
நஞ்சு கட்டி
களமதில்
கருவி ஏவி
சாவு பல கண்டோம்
ஏன்…..
கார்த்திகை 27 இல்
எமக்கு
ஓர் நாள்
கழிப்பு கழிப்பீர் என்றோ..???!

கல்லறைகள்
வரிசையாய்
அடிக்கி நிற்கும்
கோலம்..
எம் கால்களின்
அணிவகுப்பினைச் சொல்லும்..
அது கூட – இன்று
எதிரி காலடியில்..!
தேசப் புதல்வர்தம்
வித்துடல்களின்
குருதியாற்றின்
ஈரப் பெருக்கம்
கார்த்திகைப் பூவின்
செந்நிறமாகி..!

இந்த வேளையும்
இசைக்க ஒரு
கானம் இருக்குது..
மோகமோ
முகாரியோ அல்ல
தேச பக்தியே அது..!

அண்ணல் காந்தியின்
வீரத்துக்கு
தேச பக்தி கொண்டெழும் உறவுகள்
என் தேச பக்திக்கு
பதில் சொல்ல..
மணிக்கணக்கு தேடுகிறார்
Money தான் முதன்மை என்கிறார்..
பிழைக்கத் தெரியாதவன்
நான் என்கிறார்..!!!
இல்லை இல்லை..
நாங்களோ
இசை ஞானமில்லா
சூனியங்கள் என்கிறார்
ஆணவத்தின்
வடிவம் என்கிறார்.
இன்னும் என்னென்னவோ
எல்லாம் சொல்கிறார்.

ஆம்…
உங்கள் வார்த்தைகள்
உண்மை தான்..
எம்மோடு இருப்பதோ
எம் தேகம் கூட இல்லை
தேச தாகம் மட்டுமே…!!!

தேசம் ஒன்று இன்றேல்
இந்த ஞானத்தின் சரிவு
காலத்தால்
உடலழிவில் நிகழும்..!
நில அழிவோ
பறிப்போ
இன அழிவில்
முடியும்..!
இசைக்க ஆளுமற்ற
கேட்க யாருமற்ற
வெற்றிடம்
ஓர் நாள் மிஞ்சும்..!

சிந்தியுங்கள்..
ஞானிகளே
அவர்தம் சீடர்களே..!
கேளுங்கள்
தோழர்களே…
கார்த்திகை
எமக்கு
உயிர்..!
அதன் நனிகுளிர்
காற்றில் கலந்திருப்பது
வெறும் நீர்த்துளி அல்ல
எம்
உயிர்த்துளி..!
காற்றாய் வீசுவது
உப்புத் துகள்கள் அல்ல
எம் கல்லறை
மூச்சுக்கள்..!

காலம்
ஓர் நாள்
உண்மை
உணர்த்தும்..
இசைஞானம் அன்று
சேதி கேட்டு
உயிர் நீத்திருக்கும்..!

இது சாபம் அல்ல
சரிதம்..!

Leave a comment »

சுட்டிப் பையன்.. நான் வயசுக்கு வந்திட்டேன்..!

மூஞ்சியில்
புள்வெளி துளிர்க்கும்
காலிடை
காடு பற்றி வளரும்..
காட்டிடை
ஒற்றைத் தென்னை மரம்
ஓங்கி வளரும்
தேகம்
“ஓடிக்குளோன்” பூசாமலே
வாசம் வீசும்..!

கானகத்துக் குயிலிசை
காண்டாமிருகக் கத்தலாகும்
பறட்டைத் தலை
வாரி இழுக்கும்
இல்ல.. கொம்பு வைக்கும்
கசங்கிய சட்டை
“அயன்” பண்ணும்
அரைக்காற்சட்டை
பாதம் வரை
நீண்டு நீளும்..!

பக்கத்து வீட்டு
பருவப் பாப்பா
நடு நிசியில்
கனவில் வரும்..
ஆடைகள் ஈரமாகும்
இன்பப் பாய்ச்சல்
இடைக்கிடை நிகழும்..
இப்படித்தான்
அம்மா கருப்பை
தாண்டி வந்து
பன்னிரு ஆண்டில்
ஆனது..!

கூடவே…
பள்ளியில்
தூசணம்
பொழுது போக்காகும்
கை நடுவிரல்
சுட்டுவிரல் பெருவிரல்
அடிக்கடி
கூட்டம் போடும்…
கடைசி விரல்
நக அளவு
விட்டம் பார்க்கும்..
விஞ்ஞான பாடத்தில்
உயிரியல் பிடிக்கும்
அதிலும்
இனப்பெருக்கம்
ரெம்பப் பிடிக்கும்…!

இளையராஜா
ஏ ஆர் ரகுமான்
கிணுகிணுத்த
தென்னை மரம் சுற்றும்
பாடல்கள்
இன்னிசையாகும்
நாவலும்
கதைகளும்
கண்கள் தேடிப் படிக்கும்
கவிதைகள்
விரல்கள் தானே
கிறுக்கும்..
அழகு
இருக்கோ இல்லையோ
மனம்
அடிக்கடி
கண்ணாடியில்
லயித்துக் கொள்ளும்..!

ஆபத்து..
தெரிந்தும்
கைகள் விட்டு
சைக்கிள் பறக்கும்
கார்கள் உறுமும்
பாடல் உரக்கக் கத்தும்..
காது செவிடானாலும்
அவள் காதில் விழனும்
மனம் கட்டளை போடும்..!

பாவை அவள்
யாராய் இருப்பினும்..
வாசம்
தேடி நுகரும்
பரிசம்
மின்சாரம் பிறப்பிக்கும்
மூளை
கிறுகிறுக்கும்
உடல்
காற்றில் பறக்கும்
மனம்
தனிமை விரும்பும்..!

பொதுவெளியில்
மங்கையர் முன்
தலைகள் கவிழும்..
கிணற்றடியில்
கண்கள் மேயும்..
யன்னல் இடைவெளிகள்
திரைகளாகும்
அட்டைப் படங்கள்
கசங்கலாகும்…!

இவைதாம்
அறிகுறிகள்
ஆணது
பூப்பெய்தலுக்கு..!
அது
ஏழிலும் வரலாம்
எழுபதிலும் நிகழலாம்..!

Comments (1) »

மூளி..!

நாள்.. நட்சத்திரம்
சொல்லி ஒரு கல்யாணம்
அடுத்து வந்த
ஆண் பெண்
உடல் கலவி கூட
அடுத்தவன் சொல்லி வைத்த
சுப முகூர்த்தத்தில்..
தென்னிந்திய சினிமா பார்த்து
வளைகாப்பு
அது கூட
சுப நேரத்தில்..!

“இது அதிஸ்டக் குழந்தை”
ஊராரின்
வாழ்த்தொலிகளோ
கரு முதல்
தொட்டில் வரை..!

முதல் பிறந்த தினம்
வெகு கொண்டாட்டம்..
குடும்பக் “குண்டுமணிக்கு”
குதூகலத் திருவிழா..!
பட்டென்ன
பள பளக்கும் நகையென்ன..!
அழகு கொஞ்சும்
என் மேனி
முத்தமிடா
இதழ்களில்லை
பதியாத கரங்களில்லை
ஜொலிக்கும் நட்சத்திரமாய்
அன்று நான்..!

அடுத்து வந்த ஆண்டுகளும்
அளவில்லா மகிழ்ச்சி தான்.
பள்ளிப் பருவத்தில்
சுட்டிக் குழந்தை
புளுகாத ஆசிரியர் இல்லை
புகழாத ஊரார் இல்லை..!

பூவாய் நான்
பூத்து நின்ற வேளை..
அதுவும் அதிஸ்ட நாளாம்.
பூ நான்
புனித நீராடி நின்ற வேளை
அட… அது கூட
நல்ல நேரமாம்..!

பருவக் கிளத்தியாய்
பார் போற்றும்
பதிவிரதையாய்
கணவனே கண்கண்ட தெய்வம்
என்று நின்றவள்
இவள்..!
கார்மேகக் கண்ணன் வேண்டாம்
கருங்கோல இராமன்
வேண்டும் என்ற
அழகுப் பதுமை நான்..!

பெரியோர் விருப்பறிந்து
புரோகிதர் நேரம் கணிக்க
மந்திரங்கள் முழங்க
பார் போற்றும்
மங்கையாய்
நளங்கு கலியாணம் காண
நாணிக் கோணி
அழகு பொம்மையாய்
அண்ணல் திருவுருவம்
கடைக்கண் நோக்கி
மேடையேறி
கரம் பிடித்த
அதிஸ்ட தேவதை நான்..!

வாழ்த்துக்கும் குறைச்சலில்லை
பரிசிற்கும் குறைச்சலில்லை..!
ஆண்டு ஒன்று போய்
வாரிசிற்கும்
குறைச்சலில்லை..!
“சுமங்கலி”
என்ற பதச் சூடலுக்கும்
நிகழ்ச்சி முதன்மைக்கும்
என் பெயர்
முன்னணியில்..!
ஊரில் நானொரு
படிதாண்டாப்
பத்தினி..
திருமகளின்
அவதாரமாம்..!

விதி மாறும்
நேரம்..
முள்ளிவாய்க்கால் தனில்
என்னவன்
சரீரம்
தேசத்துக்காய்
தொலைந்து போனது..!
அன்று முதல்
ஆனால் இவள்
மூளி..!

புன்னகை கண்டு
ஆண்டு மூன்று ஆச்சுது
புலம்பெயர்ந்து
தூர தேசம் வந்தும்
எனக்கு விடியலில்லை..!

முகாமதில்
சிங்களக் காடைகளின்
கோரச் செயலில்
கெடுக்கப்பட்டிருப்பனோ
சந்தேகம் கொட்டும்
பார்வைகள்…
“வன்னியில் இருந்து
வந்தவள்..”
அடைமொழி வார்த்தைகள்…
தேளிலும் கொடிய
கொடுக்குகளாய்
கொட்டும் விசங்கள்
என் செவி ஏறும்
தருணங்கள்
செத்துப் பிழைக்கிறேன்..!
செய்த தவறு தான்
ஏதுமில்லை..!

எதிரியின்
கோரக் குண்டு வீச்சில்
தப்பி..
அவன் கோரப்பிடியிலின்றும்
தவறி..
வீரம் விதைத்த
மண்ணின்று வந்த
எனக்கு
இன்று
வீண் பழி சுமக்கும்
நிலை…!
வீரன் ஒருவன்
குழந்தை
இன்று
மூளிக் குழந்தையாய்
என் மடியில்..!

வரலாறாய்
கற்பினைப் போற்ற
ஒரு சீதை…
கணவனைப் போற்ற
ஒரு கண்ணகி..
இரண்டும்
ஒன்றாய்க் கொண்டவள் நான்.
இருந்தும்
என் இருப்பு
கண்ணெதிரே
அமைந்தும்
காண யாருமற்ற
பாவியாய்..
மாதவியிலும் கேடாய்
என் மேல்
குரோதங்கள்…!!

நேற்றைய
குண்டுமணி
குடும்பக் குத்துவிளக்கு
இன்று
குப்பைக்குள் வீசப்பட்ட
கொடுமை…!
ஓசியாய் போற்றியோர்
இன்று
ஈசியாய் திட்டுகிறார்..!

இருந்தும்
இழக்கவில்லை நம்பிக்கை..!
என் தேசம்
விடியும்
உதய சூரியனாய்
என் கண்ணாளன்
வருகை
தேசத்துக்கு மட்டுமல்ல
எனக்கும்
விடியலாய்
அமையும்..!

அதுவரை
பத்தினி இவள்
சாபம்
எதிரியை
சபிக்கும்..!
துரோகிகளை
அழிக்கும்..!
வீரரை
நினைக்கும்..!
வீரத்தை
ஊட்டும்..!
விடுதலையை
நேசிக்கும்..!
பழிப்புக்கு
நான்
சாகப் போவதில்லை..!
தமிழீழ
தேசத்தை
சாகடிக்கப் போவதில்லை..!!!

Leave a comment »

இடத்துக்கு இடம் நிறம் மாறும் மனிதம்: கொடுமை காணீர்..!

Posted Image

[An assault rifle and fragments of skull coming out at a scratch of the earth in a mass burial area. Mu’l’livaaykkaal bunker area.]

ஐரோப்பாவில்..
ஒற்றைச் சிறுமியின்
கடத்தல்…
ஒரு தேசமே
கண்ணீர் வடிக்கிறது..!

இந்து சமுத்திரத்தில்
ஒரு தேசமே
கூட்டழிப்பு
யார் கண்ணிலும்
தண்ணீர் படாத
துயரமங்கு..!

மண்ணோடு மண்ணான
மண்டை ஓடுகளும்
விடுதலைக்காய்
முழங்கித் தள்ளிய
துப்பாக்கிகளும்
பயங்கரவாதக் கூக்குரலில்
அடிபட்டு..
கூடவே உக்கி
உரமாகின்றன..!

தூரத்தே இருந்து
கூச்சலடித்த கூட்டமும்
மனிதப் பிணங்களின்
“ஸ்கோர்” எண்ணி
செய்தி போட்ட
ரொய்டர்களும் ஏ எவ் பிகளும்
ஏ பிகளும்
இன்னும் இன்னும்
பிழைப்பை ஓட்டிய தீரர்களும்
இன்று
எதிரிகளின்
சட்டைப்பைக்குள்
கை விட்டபடி
மெளனிகளாக..!

எல்லோரும்
மனிதர் தாம்
இருந்தும்…
ஒருவருக்கு
சொந்த தேசமாம்
அவர் தொலைவில்
மொத்த
தேசமே அழுகிறது..!
மற்றவருக்கோ
அவர் சாவிலும்
அழ
யாருமற்ற
நாதி நிலை..!
அவரெல்லாம்
அடுத்தவர் தேசத்து
அடிமைகளாம்…!!!!

மனிதரில்
வலிமை
எழுதும் தீர்ப்பதில்
மனிதாபிமானம்
தூக்கிலிடப்படும்
தருணங்கள் மட்டும்
கண்கட்டு வித்தைகளாய்
கண்ணிரண்டிருந்து
மறைக்கப்படும் அவலம்..!

இவையும்
சனநாயகமோ..
மனிதாபிமானமோ..??!
சாவுக்கு முன்
லிங்கனும்
காந்தியும் புத்தனும்
இவை காணின்
தத்துவமல்ல
தரித்திரம்
என்றே
தம்மை மாய்த்திருப்பர்..!

இருந்தும்
இயற்கையின் விதிப்படி
சுழலுது
உலகம்…!
நொந்து அழும்
என் மனதும்
கூடவே சுழல்கிறது
செய்யக்
கேட்க
செயலற்ற
“ரோபோ”வாக
என் வாழ்க்கை….!

மனிதம்
இடத்துக்கு
இடம்
நிறம் மாறும்
கோலம்
அவலம்..!
இருந்தும்
அலட்டிக் கொள்வதில்லை..!

மெளனித்த
வாய் திறப்பின்
நாளை
என்
மனிதமும்
நிறம் மாறலாம்
கேள்விக்குறி ஆகலாம்..!

படம்: ஆனந்தபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இருந்து தமிழ்நெட்..!

மேலும் ஆனந்தபுரம் முள்ளிவாய்க்கால் பேரவலங்கள்.. பற்றிய தற்போதைய சுவடுகளுடன்.. கண்ணீர் சொட்டச் செய்யும் செய்தி.. இங்கே கீழுள்ள இணைப்பில்..

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35617

Leave a comment »