மாவீரர் மீதொரு புதுப்பரணி – ஒலித்தட்டில் இருந்து…தீவினிலே ஒரு தீபம்

பாடகர்: ஈழத்துக் கலைஞர் நாதன்

பாடலாக்கம்: நெடுக்ஸ்

இசை: சேகர்

Leave a comment »

வெடிக்க வேண்டும் மக்கள் புரட்சி.. மிரட்சி அல்ல..!!!

திலீபன்

விழியோரங்கள் அரும்பிய

நீர் துடைத்து

கயிற்று நிரைகளுக்குள்

அடங்கி இருக்கும்

மக்கள் கூட்டம் நடுவிருந்து

கண்கள் அவனையே நோக்குகின்றன..!

 

பின்புலத்தில்

சீறிப் பாயும் புலியா

யாழ் இந்துவின்

உண்மைப் புதல்வனா

தாய் தமிழீழத்தின்

செல்லப் பிள்ளையா

மக்கள் விடுதலையின்

ஒற்றைக் குரலா…

கேள்விகள்

அவன் கோலம் கண்டெழுகின்றன..!

 

சின்னஞ்சிறுசுகளின் மாமா..

எங்கள் அண்ணா

உங்கள் தம்பி

பலரின் பிள்ளை

சிலரின் எதிரி

சிந்தனை ஒன்றை வைத்து

உண்ணா நோன்பிருந்து

மக்களை துயில்

எழுப்பிக் கொண்டிருந்தான்..!!

 

கனவுகள் அவன்

தனக்காக கண்டதில்லை..!

சனத்துக்காக தன் சாவிலும் கூட

மேலிருந்து

விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்…

தேகத்தையே

தேசத்தில் பிள்ளைகள் படிக்க

கொடுத்தவன்..

நம்பிக்கை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

 

இன்று…

வீழ்ந்துவிட்ட அவன் அடையாளங்கள்

வீழாது வைத்திருக்கிறது

இதயங்கள் எங்கும் அவன் நினைவுகள்.!!

உயிர் உள்ள வரை

தமிழன் என்ற இனம் உள்ளவரை

அண்ணன் திலீபன் வாழ்வான்

அது உறுதி..!

 

ஆனால்…

அவன் உயிர் தந்த இலட்சியம்..

செத்து விடுமோ..

சாகடிக்கப்படுமோ…??!

வினாக்கள் விளைகின்ற காலமிதுவாகிப் போனது

துரதிஸ்டம்..!!

இந்த நிலை மாற வேண்டும்

சுதந்திர தமிழீழம் மலர வேண்டும்

அதுக்கு வெடிக்க வேண்டும்

மக்கள் புரட்சி..

மிரட்சி அல்ல…!!!!

Leave a comment »

நித்திரையை குலைத்தவள்..!

புதியவள் ஒருத்தி

என் அறையில் என்னோடு..

நடு நிசியை நோக்கி

நேரம் ஆகிறது..

படுக்கைக்குப் போக..

விளக்கை அணைக்கவா

இல்லை விடவா..

உள்ளம் தடுமாறுகிறது…!

 

உள்ளூர ஒரு பயம்

என்னை அணுகுவாளா

உயர நகர்வாளா

பின் என் உடல் மீது பாய்வாளா..

அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??!

அனுபவமின்றியவன் நான்

சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்…

 

அவளோ

என் அறைக்குள்

துணிவோடு..

அனுமதி இன்றி நுழைந்தவளாய்

சுவரோடு ஒட்டியவளாய்

நகர்வின்றி…

என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள்

அதை அழைப்பு என்பதா

எச்சரிக்கை என்பதா..??!

சிந்தனை குழம்புகிறது..!!

 

போனால் போகுது

எனியும்..

விடுவதில்லை இவளை..!

விட்டால்

என் நித்திரை இன்றி இரவுகளுக்கு

யார் பதில் சொல்வது..??!

 

நொடிகளை வீணாக்காமல்

அவளை நெருங்குகிறேன்

நகர்வின்றி நின்றவள்

நகர முனைகிறாள்

திமிர முனைகிறாள்..

நானோ விடுவதாக இல்லை

ஒருகை பார்த்தே விடுவது

என்ற துணிவில்..

 

அவளோ

அதுவரை அஞ்சமின்றி நின்றவள்

அசந்து போகிறாள்

கண்களில் பயத்தைக் கொட்டிறாள்

உடலை நெளித்துக் கொள்கிறாள்

கால்கள் நகர்ந்து ஓட முனைகின்றன..

 

என் கண்கள் இவற்றை ரசிக்க

என் மூளை

அவளுக்கு இரக்கம் காட்டுகிறது.

சரணாகதி அடைபவளை

கஸ்டப்படுத்துவது

காருணியமே அற்றது..

போதனை செய்கிறது..!

 

இருந்தாலும்

தொலைய இருக்கும்

சந்தர்ப்பங்களை எண்ணிய

மனசு

முடிவெடுக்கிறது..

நினைத்ததை

முடித்தே விடுவது என்று.

 

கிட்ட நெருங்குகிறேன்

கையில் ஒரு கவிதைக் கொப்பி..

நீட்டுகிறேன்

அவளோ விலத்தி

ஓடினாள்

பாய்ந்து வீழ்ந்தாள்

நானோ

அலறி அடித்துக் கொண்டு

அறையை விட்டே ஓடினேன்…

ஓடினேன்.. ஓடினேன்

வீட்டின் வாசல் வரை ஓடினேன்..!

 

நித்திரை இன்றிய

இரவோடு

நிம்மதியும் தொலைந்தது.

தேடுதல் வேட்டையும் கூடவே

சேர்ந்து கொண்டது.

தொலைந்து போனவள்

எங்கே பதுங்கினாளோ

எப்ப பாய்வாளோ..

இன்னும்.. விடையின்றிய நொடிகளோடு

பதட்டம் இருப்பதால்..

பயத்தை மறைக்க

பதிகிறேன் இதனை..!

 

எல்லாம்..

புது அனுபவமாய்..

முதல் அனுபவமாய்..

அதைத் தந்தவளாய் அவள்..

இதோ..!!

spider

Leave a comment »

மின்னணுவுக்குள் மின்னிய காதல்..!

b-flower

மலரோடு நேசம் வைக்க

குருவிக்கு கற்றுத் தரத் தேவையில்லை..

 

நிலவோடு நேசம் வைக்க

வானுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை..

 

இதழோடு நேசம் வைக்க

முத்தத்துக்கு எச்சில்கள் தேவையில்லை..

 

சூரியனோடு நேசம் வைக்க

சூரியகாந்திக்கு மின்னஞ்சல் தேவையில்லை..

 

தென்றலோடு நேசம் வைக்க

தோப்புக்கு பேஸ்புக் தேவையில்லை..

 

காலத்தோடு நேசம் வைக்க

வாழ்க்கைக்கு செல்போன் தேவையில்லை..

 

கருவோடு நேசம் வைக்க

இலத்திரனுக்கு புவிஈர்ப்பு விசை தேவையில்லை..

 

என்னோடு  நேசம் வைக்க..

மின்னணுக்களில் மின்னிய உன் காதலை அழிக்கத் தேவையில்லை..

காரணம்…

உன் மின்னணுக்கள் என் உடலணுக்கள் எங்கும்

நிலைபெற்று விட்டதால்..!

Leave a comment »

குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது.. குடும்பிக்கார மறைவில் இருந்து…!

இது கம்பன் பாடாத

கவிதை..

தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே

தீயோடும்.. புதை குழியோடும்

தீர்ந்துவிட்ட சீதைகளின்

துயர் மறந்தோர்

கவிதை இது.

வேதனையின்..

கூக்குரல்..!

 

இதுவும் ஒரு வதை

தனக்குத் தானே செதுக்கிய..

சிம்மாசனத்தில்

இவர்..!

சிங்கள

அமைச்சரவையில்

அவர்…!!

குத்தியரின்

காசோலை அம்பு பாய்கிறது

குடும்பிக்கார மறைவில் இருந்து.

வாலி அங்கும்

வீழ்கிறான்..

இராமன் இங்கும்

வெல்கிறான்..!!

 

அதர்மம் அழித்து

தர்மம் வென்றதாய்

காட்ட

ஒரு காசோலை மட்டும்

பரிமாறப்படுகிறது..

மீண்டும் வரலாறு

திரித்து எழுதப்படுகிறது…!

 

கம்பனுக்கு

அன்று..

வாலி புகழ்

திரித்து

இராம புகழ் பாட

கவி… பாட

கள்ளிருந்தது

தான் பெருங் கவி எனும்

புகழ் விருப்பிருந்தது

கூட அகத்தே

பெரும் திமிர் இருந்தது..!

 

இந்தக்

கள்ளன்களுக்கு

துதிபாட

தமிழர் துயர்

மட்டுமே இருக்குது..!

உள்ளத்தே

ஈடேறா..

விருப்புக்களோ

இந்து மகா சமுத்திரம்

அளவு இருக்குது…!!!

 

தாய் மண்ணை

போர் தின்ற வேளையிலும்

இராம – இராவண

காவியம் பாடி

கருத்தைச் சிதைத்தோர்..

இன்று

கொழும்பில்

சிங்களச் சீமையில்..

கவி பாடி தாம் இருக்க..

தாடி எதிரி துதிபாடி

கவிழ்த்ததாம் புலி

என்று

இறுமாப்புக் கொள்கிறார்.!

 

பனைமரக் காட்டிடை

இறக்கை உலர்த்த

காக்கை ஒன்று

பழமிருக்க

கொண்டை அவிழ்ந்து வீழ்ந்ததாம்

பழம்.

கொண்டை அங்கே

குதூகலித்ததாம்

வீழ்த்தினோம்

சொந்த உறவை என்று.

எங்கிருந்தோ வந்த

காக்கை அங்கே

இதயம்

கனத்து நின்றதாம்..!

பழமோ

விதையான சந்தோசத்தில்

மண்ணோடு

புதையுண்டு போனதாம்.!

 

இங்கே..

கொண்டை ஒன்றின்

குடும்பி பற்றி

தாடி ஒன்று

வதம் செய்கிறது

எதிரி கூட

நின்று செய்தது

போதாதென்று

இன்னும்..

சொந்த இன

வதம் தொடர்கிறது.

சொந்த வயிறு வளர்க்க

தேவை அது என்பதால்..!

 

ஆனால்..

வீழ்ந்தது

வீழ்த்தியது..

புலி என்று

பசப்பி நிற்குது.

மக்கள்

உரிமை வென்றது

என்று

ஊருக்கு நரி காட்டி நிற்குது.

 

இலக்கியம்

வசனம் அதை

மறைத்து நிற்க

கம்ப கோட்ட வாசலில்

வழிந்தோடும்

தமிழர் இரத்தம்

இன்னும் காயாத

ஈரமாய்..!

மறைக்க

மறக்க முடியா

துயராய் அது..!

 

தீக்குளிக்க

சீதைகளே இல்லாத

தேசமாய் போனது

சிங்களச் சேனைகளால்

சொந்த தேசம்.

சிந்திப்பாரா..

ஏசி மேடையில்..

இராம வசனம் பேசி

எதிரி கூடாரம் இருந்து..

தமிழர் உரிமை

மீட்போர்..!!!

 

குடுமி

Leave a comment »

அவள் வேண்டும்..!

கண்கள் மேய
விரல்கள் தடவ
வெளிச்சத்தில் இது நடக்க..
அவள் வேண்டும்.

பக்கம் பக்கமாய்
பாகம் பாகமாய்
பிரித்துப் படிக்க..
காரியம் முடிக்க
சித்தி பெற அவள் வேண்டும்.

சிந்தனைக்கு
ஓர் புத்துணர்ச்சி
இரத்த நாளங்களுக்கு
ஓர் கிளர்ச்சி..!
அவள் சேவை
தேவை
வாழ்க்கை எங்கும்..!

சோம்பல் போக்க
படுக்கையில் கூட
எனக்கு அவள் வேண்டும்.
இன்றேல்
பைத்தியம் தான் பிடிக்கும்..!

இத்தோடு சிந்தனைக்கு
சிறையிடுங்கள்
அவள் வேறு யாருமல்ல..
நான் படிக்கும்
பாடப் புத்தகம்..!

 

 

 

study-desk-3

 

படுத்திருந்து புத்தகம் படிப்பதே எனக்கும் பிடிக்கும். இதில் பல இலாபம். அதில் ஒன்று.. அப்படியே நித்தாக்குப் போயிடலாம்.

Leave a comment »

ஏய் மனிதா நில்லு… சொல்லு..!!!!

போர்1

ஏய் மனிதா நில்லு

உலகம் படைச்சது எதற்காக

நீ…

உலோகம் கொண்டு எல்லையிடவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

இவள் பிறந்தது எதற்காக

நீ..

கம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

ஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும்

பதறுவது எதற்காக..

நீ

இவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா…??!

 

ஏய் மனிதா சொல்லு

உன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக

நீ

இவள் போல்

எண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

யுனிசெப் என்ற ஒன்று எதற்காக..

நீ

உள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

மனித உரிமைகள் யாருக்காக..

நீ

வெள்ளைத்தோலால் உலகை ஆள்வதற்கா..??!

 

ஏய் மனிதா சொல்லு..

இந்த வேசங்கள் எதற்காக

நீ

அழிவைத் தேடிச் செல்வதாலா..??!

 

ஏய் மனிதா சொல்லு…

இந்தப் பிஞ்சின் கண்ணில் கண்ணீர் எதற்காக

நீ…

அவள் வலியில் வாழ்வதற்காகவா..!

 

ஏய் மனிதா நில்லு..

உன்னிடம் ஆயுதம் எதற்காக..??!

உன் உரிமைக்காக.

அதுவே மற்றவரிடமும்.. அவர் உரிமை காக்க.

நீ..

அதையே பயங்கரவாதமும் ஆக்காதே.

 

ஏய் மனிதா நில்லு..

அடுத்தவனை திட்டுவது எதற்காக..??!

நீ

முதலில் உன் செயல் எண்ணிப்பார்…!!!!

 

ஏய் மனிதா நில்லு

இனியும் வேண்டாம் இந்த வேற்றுமைகள்

நீ

ஒன்றில் திருந்து அல்லது திருத்தப்படுவாய்…

கடவுளால் அல்ல இவள் போல் சக மனிதனால்..!!!!

Leave a comment »