Archive for மனிதம்

விடுதலை தேடிய பாவச் சுவடுகள்

ஆண்டுகள் ஏழு கடந்தும்..

சுவடுகளாய்

கட்டிய சேலைகளும்

காவிய பொம்மைகளும்

சீன அமிலத்தில் கரைந்து போன

எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..!

 

இலட்சியம் சுமந்த மறவர் பின்

விடுதலைக் கனவோடு

பாதம் பதித்த நம்பிக்கைகள்…

எதிரியின்

உயிர்ப்பிச்சைக்காய்

ஏங்கியே ஒதுங்கிய

அந்த மணற்றரையில்

உப்பில் கலந்து

உடல் கரைவார் என்று

யார் நினைத்தார்..!

 

கந்தகக் குண்டுகளோடு

பொஸ்பரஸ் அதுஇதென்று

ஆவர்த்தன அட்டவணையில்

அடங்கியவை எல்லாம் கொட்டி

உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி

ஓர் இனத்தின் தலைவிதியை

தலையறுத்து

சன்னங்களால் சன்னதம் ஆடிய

பூமி அது..!

 

இலைகள் உதிரலாம்

கிளைகள் முறியலாம்

தண்டுகள் சாயலாம்

ஏன் …

வேர்கள் அறுபடலாம்

ஆனால்

வித்துக்கள்

முளைக்கும்..!!

 

முள்ளிவாய்க்கால்

மண்ணில்

பாவச் சுவடுகளாய்

பாத்தியிடப் பட்டவை

பாவிகள் உடல்கள் அல்ல..

பாரினில்

ஓர் மனித இனத்தின்

சுதந்திரக் கனவுக்கான

உறங்குநிலை வித்துக்களாம்..!

 

மீண்டும் அவை

முளைக்கும்

வடிவங்கள் வேறாயினும்

வாழ்வுரிமை வேள்வியில்

அவை தீராது எழும்

மணற்றரையில் கூடியுள்ள

ஒவ்வாமைகள் வென்று…!

 

ஒற்றுமையே அதற்கு

நீர் வார்க்கும்

நெஞ்சில் நிலைக்கும் 

நினைவே அதற்கு

ஊட்டமாகும்..!

சந்ததிகள்

தாண்டியும்

அது சாத்தியமாகும்..!

அதுவரை

ஓயாமல் ஒலிக்கட்டும்

நீதிக்கான நீண்ட குரல்

இவ் வையகம் எங்கும்..!!

 

ஆக்கம் நெடுக்ஸ் (13.05.2016)

Advertisements

Leave a comment »

சந்தனமேனிகள் செம்மரக்கட்டைகளாதென்ன..!!

செந்தமிழ் தாயின்

சந்தன மேனியர்

ஆந்திர எல்லையில்

சரிந்தே வீழ்ந்தனர்

மரக்கட்டைகள் நடுவே

செம்மரக்கட்டைகளாய்..!

 

கிரந்த மொழி பேசும்

திராவிட வாரிசுகளாம்

தெலுங்கர்கள்

பட்சாதாபமின்றி

வேட்டையாடி மகிழ்ந்தனர்

செந்தமிழன் பிணம் வீழ்த்தி…!

 

சிங்களப் பேய்கள்..

ஹிந்தியப் பிசாசுகள்

குடித்த ஈழத்தமிழ் இரத்தம்

காய முதல்..

கடலில் கரைந்த

தமிழகத் தமிழனின் குருதி

நிறம் மாற முன்..

நடந்தது சம்பவம்..!

 

சந்தனக் கடத்தலை

சாட்டி

முதலைகள்

வேட்டையாடி முடித்தன..

மீண்டும்

ஓர் இனப்படுகொலையின்

நினைவை

மனதின் ஓரத்தில் இருத்தி..!

 

புலிக்கொடி நடுவே

படை நடத்திய

சோழ தேசம்

இன்று

வீழ்ந்து மடிகிறது..!

காரணம் தான் என்ன..

தமிழனை தமிழன்

ஆள வழியின்றி போனதே..!

 

மீட்போம்

எம் ஆளும் உரிமை..

காப்போம்

தமிழர் வாழ்வுரிமை

இவ் வையகத்தில்..!

 

மாற்று வழி தான்

இதற்கும் இல்லை

புரிந்தே நின்று

புரிய வைப்போம்

சொந்த தேசமிழந்து..

வையகம் எங்கும்

சிதறி வாழும்

தமிழ் உள்ளங்களில்..!!

Leave a comment »

ஏய் மனிதா நில்லு… சொல்லு..!!!!

போர்1

ஏய் மனிதா நில்லு

உலகம் படைச்சது எதற்காக

நீ…

உலோகம் கொண்டு எல்லையிடவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

இவள் பிறந்தது எதற்காக

நீ..

கம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

ஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும்

பதறுவது எதற்காக..

நீ

இவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா…??!

 

ஏய் மனிதா சொல்லு

உன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக

நீ

இவள் போல்

எண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

யுனிசெப் என்ற ஒன்று எதற்காக..

நீ

உள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

மனித உரிமைகள் யாருக்காக..

நீ

வெள்ளைத்தோலால் உலகை ஆள்வதற்கா..??!

 

ஏய் மனிதா சொல்லு..

இந்த வேசங்கள் எதற்காக

நீ

அழிவைத் தேடிச் செல்வதாலா..??!

 

ஏய் மனிதா சொல்லு…

இந்தப் பிஞ்சின் கண்ணில் கண்ணீர் எதற்காக

நீ…

அவள் வலியில் வாழ்வதற்காகவா..!

 

ஏய் மனிதா நில்லு..

உன்னிடம் ஆயுதம் எதற்காக..??!

உன் உரிமைக்காக.

அதுவே மற்றவரிடமும்.. அவர் உரிமை காக்க.

நீ..

அதையே பயங்கரவாதமும் ஆக்காதே.

 

ஏய் மனிதா நில்லு..

அடுத்தவனை திட்டுவது எதற்காக..??!

நீ

முதலில் உன் செயல் எண்ணிப்பார்…!!!!

 

ஏய் மனிதா நில்லு

இனியும் வேண்டாம் இந்த வேற்றுமைகள்

நீ

ஒன்றில் திருந்து அல்லது திருத்தப்படுவாய்…

கடவுளால் அல்ல இவள் போல் சக மனிதனால்..!!!!

Leave a comment »

கப்பல் என்று நினைச்சன்.. கவுத்துப் போட்டியேடி.

boat

கரை தேடும்

கட்டெறும்பாக

வாழ்கைக் கடல் மீது

நம்பிக்கையோடு கரைசேர

நான் மிதக்க

இடையில்…

அலை மீது

துரும்பாக

எனைக்காக்கும் கப்பலாக

நீ வந்தாய்.

காதல் எனும்

கயிறு போட்டு

தொற்றிக் கொண்டேன்

உன்னிடத்தில்.

 

நீயோ…

பத்திரமாய் எனை

கரை சேர்ப்பாய் என்றிருக்க

காதல் கசந்ததென்று..

நடுக்கடலில்

தள்ளிவிட்டாய்.

பரிதவித்தே

போனேனடி.

நம்பிக்கை தகர்ந்து..!!

 

ஈவிரக்கம் இல்லாதவளே

உன்னை ஓர் நாள்

கடல் நடுவே

திமிங்கலம் ஒன்று

கவிழ்க்குமடி…

அப்போதும்

கட்டெறும்பாய்

நான்..

அலை மீது

உனக்கு உதவிடுவேன்

நிச்சயம்

பழிவாங்கேன்..!

அது உன்னுடன்

காதலுக்காய் அல்ல

என்னுடன்

உள்ள ஜீவகாருணியத்திற்காய்..!

 

(படத்துக்காய் ஓர் வரி.)

Leave a comment »

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

[kiddu.jpg]

தமிழர் நிலத்தினிலே

ஒல்லாந்தன் கட்டிய கோட்டையிலே

சிங்கக்கொடி..

அது அகற்றி

தமிழர் வீரப் புலிக் கொடியேற்ற

சமராடியது ஒரு பொடி

அவனே..

கிட்டு என்ற அந்த புலிப் பொடி.

 

வேட்டுகள் அவன் விருப்பு அல்ல

மக்கள் விடுதலையே

அவன் கனவு..!

சின்னப் பொடியள் முதல்

வயதான தாத்தா வரை

“மாமா” என்றழைக்கும்

அன்பு மகன்..

யாழ் நகரின் செல்லப் பொடி..

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி..!

 

விடுதலைப் பாதையிலே

தொல்லைகள் தந்தோர்

குண்டு எறிய

ஒற்றைக் காலிழந்த பொடி

நம்பிக்கை தளராத

துணிவோடு களமாடினான்

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

தமிழீழ விடுதலை என்ற

தேசக் கடமைக்காய்

உறவுகளைப் பலப்படுத்த

தலைவன் காட்டி பாதையில்

ராஜதந்திரியாய்

ஏழ்கடல் தாண்டி

தொலை தேசமும் நகர்ந்தான்

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

தமிழீழ மண்ணில்

ஹிந்திய வல்லாதிக்க வெறியுடன்

அண்ணன் படை

சண்டை போட

சர்வதேச அரங்கில் இவன்

தமிழர் போராட்ட நீதிக்காய்

முழங்கினான்.

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

இடையில்…

அமைதி என்ற பெயரில்

ஹிந்திய சதி விளங்காது

படகேறி..

வங்கக் கடல்நடுவே

தோழரொடு..

தமிழர் வீர மரபேந்தி

வீரமரணம் அடைந்தான்

அவனே

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

ராஜீவின் கொலைப்படைகள்

செய்த பல படுகொலைகளில்

அகத் என்ற கப்பல் தகர்த்த

இக்கொலையில்…

தமிழினம் இழந்த அருமைப் பொடி

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

தேச விடுதலைக்காய்

ஆகுதியான பொடியளுள்

கேர்ணல் கிட்டு என்ற

நாமத்துடன்..

ரங்கா.. மணி

50 கலிபர்..

உறுமும் அந்த Honda 200 காட்டிய பொடி

இன்று.. மாவீரனாய்

அவனே

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

கிட்டு மாமா என்ற பொடி

அவன் விண்ணிருக்க..

அவன் மருமக்களாய்

கூடி விளையாடிய நாமோ

அநாதைகளாய்

இன்னும்…

மண்ணிருந்து

விடுதலைக்கு

ஏங்கும் பரதேசிகளாய்..!

 

Leave a comment »

ஆச்சி எடன அரிவாளை..

பொங்கல்

ஆச்சி எடன அரிவாளை..

எதுக்கடா பேராண்டி

பொங்கலுக்கு

புதுக்கதிர் எடுக்கவோ..?!

இல்லையன ஆச்சி

இனமானப் போரில்

பொட்டிழந்து பொலிவிழந்து..

குளிக்கும் உன்னைக் கூட

கணக்குப் பண்ணும்

சிங்கள நாய்களை போட்டுத்தள்ள…!

 

விடுடா அது

அவன் பிறவிக் குணம்..

இல்லையன ஆச்சி

தமிழர் நாங்கள்

புலியாய் பாய

பயந்தோடிய தெருநாய்கள்

உலக உருண்டையின்

பொய் நயத்தால்

வெற்றிக் கோசம் சேர்த்து

எம்  தேசம் மேய்கின்றன.

இன்னும் என்னை

சும்மா இருக்கச் சொல்லுறியோ..??!

 

தம்பி ராசா..

பொங்கிய இரத்தம் போதும்

செத்து வீழ்ந்ததும் போதும்

வீரம் விவேகம் விளையாடினதும் போதும்

எனிக் கொஞ்சம்

இராஜதந்திரம் படிக்கட்டும்

எம் இனம்

சும்மா கிடவடா..!

 

என்னன  ஆச்சி சொல்லுறா

கண் முன்னால

அநியாயம் கண்டும்…

இமை மூடி

சும்மா கிடவென்றோ வெருட்டுறாய்..??!

இல்லையடா பேராண்டி

அப்புவைப் போல

உன்னையும் தொலைக்க

எனக்குத் தைரியம் இல்லை.!

வம்சத்தின் ஒரே

எஞ்சிய வாரிசு நீ..!

நீயும் தொலைந்தால்..

இனம் நிலம் என்னாகும்..??!

 

அமைதியாக் கிடந்து

என்னன  ஆச்சி செய்யுறது..

எங்கட சனத்தையே

எட்டப்பனாக்கி

எங்களையே மோத விட்டு

எதிரி எப்படி வென்றானோ

எனி..

நாங்களும் அதையே செய்வம்…!

 

இப்ப பொங்கலுக்கு

நீ…

நாலு புதுக்கதிர் எடுத்து வா..

புலிகள் வீழ்ந்த மண்ணில்

களைகள் கூட முளைக்காத

வயல்களில் விளைந்த

கதிர்களடா அவை.

பொங்குவோம் அதனால்..

விடியும் வரை

பொங்கு தமிழரே பொங்கு

பொங்கு தமிழே பொங்கு என்று..!

Comments (2) »

விடியற் பொழுதின் விசித்திரங்களே…

maveerar-thuyilidam

கார்த்திகை பெற்றெடுத்த

கல்லறைகளே..

கலங்கரை விளக்குகளாய்

நீவிர்…

மனக்கரைகளில் நிமிர்ந்து நிற்கையில்

கார்த்திகைப் பூக்களுக்கு

கண்ணீர் விட  ஏது தேவை.?!

 

கார்கால இருளின்

மின்னல்களே

ஒளிரும் தாரகைகளாய்

நீவிர்

விண்ணெங்கும் நிறைந்திருக்க..

காட்டுச் சிறுத்தைக்கு

சிணுங்க ஏது தேவை…?!

 

தேசக் காற்றின் வாசமான

இளம் தென்றல்களே…

உயிர் மூச்சுக்களாய்

நீவிர்

சுவாசப்பைகள் எங்கும்

நிறைந்திருக்க…

எங்கள் வாகைக்கு

வாடி நிற்க ஏது தேவை..?!

 

கடல் கொண்டாடும்

அலையாகி நிற்போரே

ஓயாத அலைகளாய்

நீவிர்

உயிரோடிருக்க

தத்தித் திரியும்

அந்தச் செம்பகத்துக்கு

சோர்ந்திருக்க ஏது தேவை..??!

 

கால வெளியில்

கோலங்கள் மாறலாம்

தேசங்கள் அலங்கோலமாகலாம்

கண்மணிகளாய்

நீவிர்

கண்களை அலங்கரிக்க

கார்த்திகை தீபத்திற்கு

ஏக்கம் ஏது தேவை..?!

 

கல்லறைகளை இடிக்கலாம்

கல்வீடுகளை தகர்க்கலாம்

தார் வீதிகளை கிளறலாம்

தாரகைகளை தகர்க்க முடியுமோ..??!

மக்கள் மனங்களில்

மங்காத தாரகைகளாய்

நீவிர்

மாவீரரே உங்களுக்கு

கலக்கம் தான் ஏது தேவை..?!

 

விடியற் பொழுதின்

விசித்திரங்களே

தேசத்தின் தேவையற்றவைகள்

தகர்த்த தேகங்களாய்

நீவிர்

மக்கள்

தேவையற்ற தேவைகள்

தகர்க்கும் இவ்வேளையில்

உங்களை பூஜித்து நிற்கிறோம்

கொள்கை  வெல்வோம் என்றே..!!

Leave a comment »