Archive for மாவீரர்கள்

கல்லறைக் கவிதைகள்..!

kaarthikaipoo

வேலிப் பொந்தினில்

பிறந்த நேசத்தில்

கருக்கொண்டவள்

வைக்கறைப் பொழுதினில்

வைத்தியசாலையில் நன்கே பிறந்தவள்.

 

அழகு பெயரும் சூட்டி

அடுக்குச் சட்டை போட்டு

கொண்டாடிய பிறந்த நாட்கள் பல

களிப்புறக் கண்டவள்..!

 

தங்கத் தட்டினில்

பல்லுக் கொழுக்கட்டை

அவிச்சுக் கொட்ட இன்புற்றவள்..

மங்கையாய் பருவமடைந்த வேளையதில்

பல்லக்கில்

பவனி வந்தவள்..!

 

அந்நிய நாடுகளில்

அதிசய வாழ்க்கை தந்திட

கண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில்

அழகு கன்னியாக

வீதி வலம் வந்தவள்..!

 

தேசத் தாயவள்

அவதி கண்டவள்..

நொடிப் பொழுதினில்

உந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில்

வேங்கையாகி பாய்ந்து நின்றவள்.

 

தாய் நிலம் தின்ற

சிங்களப் பாசறை நொருக்கி

வீழ்ந்தவள்..

மாவீரர் வரிசையில்

நிமிர்ந்து நின்றவள்.

 

அவளாய் இருக்குமோ

இவன் வாழ்க்கைத் துணை…

தனித்து விட்டவன்

தாய் நிலம் இழந்தவன்…

சிங்களத் தடுப்பகத்தில்

ஏக்கங்களே வாழ்வாகிப் போனவன்..

காதலியோ அவள்…!!

 

கல்லறைகள் தொலைத்தவன்

கார்த்திகை அன்று

அவள் நினைவுச் சிலைக்கு

காந்தள் மலர் சூடக் கூட

கதியற்றவனாய்

கண்ணீர் பூக்களால்

பூஜித்து நிற்கிறான் இவன்

அவள் தேசக் காதலனாய்..!!

Advertisements

Comments (1) »

வெடிக்க வேண்டும் மக்கள் புரட்சி.. மிரட்சி அல்ல..!!!

திலீபன்

விழியோரங்கள் அரும்பிய

நீர் துடைத்து

கயிற்று நிரைகளுக்குள்

அடங்கி இருக்கும்

மக்கள் கூட்டம் நடுவிருந்து

கண்கள் அவனையே நோக்குகின்றன..!

 

பின்புலத்தில்

சீறிப் பாயும் புலியா

யாழ் இந்துவின்

உண்மைப் புதல்வனா

தாய் தமிழீழத்தின்

செல்லப் பிள்ளையா

மக்கள் விடுதலையின்

ஒற்றைக் குரலா…

கேள்விகள்

அவன் கோலம் கண்டெழுகின்றன..!

 

சின்னஞ்சிறுசுகளின் மாமா..

எங்கள் அண்ணா

உங்கள் தம்பி

பலரின் பிள்ளை

சிலரின் எதிரி

சிந்தனை ஒன்றை வைத்து

உண்ணா நோன்பிருந்து

மக்களை துயில்

எழுப்பிக் கொண்டிருந்தான்..!!

 

கனவுகள் அவன்

தனக்காக கண்டதில்லை..!

சனத்துக்காக தன் சாவிலும் கூட

மேலிருந்து

விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்…

தேகத்தையே

தேசத்தில் பிள்ளைகள் படிக்க

கொடுத்தவன்..

நம்பிக்கை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

 

இன்று…

வீழ்ந்துவிட்ட அவன் அடையாளங்கள்

வீழாது வைத்திருக்கிறது

இதயங்கள் எங்கும் அவன் நினைவுகள்.!!

உயிர் உள்ள வரை

தமிழன் என்ற இனம் உள்ளவரை

அண்ணன் திலீபன் வாழ்வான்

அது உறுதி..!

 

ஆனால்…

அவன் உயிர் தந்த இலட்சியம்..

செத்து விடுமோ..

சாகடிக்கப்படுமோ…??!

வினாக்கள் விளைகின்ற காலமிதுவாகிப் போனது

துரதிஸ்டம்..!!

இந்த நிலை மாற வேண்டும்

சுதந்திர தமிழீழம் மலர வேண்டும்

அதுக்கு வெடிக்க வேண்டும்

மக்கள் புரட்சி..

மிரட்சி அல்ல…!!!!

Leave a comment »

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

[kiddu.jpg]

தமிழர் நிலத்தினிலே

ஒல்லாந்தன் கட்டிய கோட்டையிலே

சிங்கக்கொடி..

அது அகற்றி

தமிழர் வீரப் புலிக் கொடியேற்ற

சமராடியது ஒரு பொடி

அவனே..

கிட்டு என்ற அந்த புலிப் பொடி.

 

வேட்டுகள் அவன் விருப்பு அல்ல

மக்கள் விடுதலையே

அவன் கனவு..!

சின்னப் பொடியள் முதல்

வயதான தாத்தா வரை

“மாமா” என்றழைக்கும்

அன்பு மகன்..

யாழ் நகரின் செல்லப் பொடி..

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி..!

 

விடுதலைப் பாதையிலே

தொல்லைகள் தந்தோர்

குண்டு எறிய

ஒற்றைக் காலிழந்த பொடி

நம்பிக்கை தளராத

துணிவோடு களமாடினான்

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

தமிழீழ விடுதலை என்ற

தேசக் கடமைக்காய்

உறவுகளைப் பலப்படுத்த

தலைவன் காட்டி பாதையில்

ராஜதந்திரியாய்

ஏழ்கடல் தாண்டி

தொலை தேசமும் நகர்ந்தான்

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

தமிழீழ மண்ணில்

ஹிந்திய வல்லாதிக்க வெறியுடன்

அண்ணன் படை

சண்டை போட

சர்வதேச அரங்கில் இவன்

தமிழர் போராட்ட நீதிக்காய்

முழங்கினான்.

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

இடையில்…

அமைதி என்ற பெயரில்

ஹிந்திய சதி விளங்காது

படகேறி..

வங்கக் கடல்நடுவே

தோழரொடு..

தமிழர் வீர மரபேந்தி

வீரமரணம் அடைந்தான்

அவனே

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

ராஜீவின் கொலைப்படைகள்

செய்த பல படுகொலைகளில்

அகத் என்ற கப்பல் தகர்த்த

இக்கொலையில்…

தமிழினம் இழந்த அருமைப் பொடி

அவனே..

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

தேச விடுதலைக்காய்

ஆகுதியான பொடியளுள்

கேர்ணல் கிட்டு என்ற

நாமத்துடன்..

ரங்கா.. மணி

50 கலிபர்..

உறுமும் அந்த Honda 200 காட்டிய பொடி

இன்று.. மாவீரனாய்

அவனே

கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.

 

கிட்டு மாமா என்ற பொடி

அவன் விண்ணிருக்க..

அவன் மருமக்களாய்

கூடி விளையாடிய நாமோ

அநாதைகளாய்

இன்னும்…

மண்ணிருந்து

விடுதலைக்கு

ஏங்கும் பரதேசிகளாய்..!

 

Leave a comment »

விடியற் பொழுதின் விசித்திரங்களே…

maveerar-thuyilidam

கார்த்திகை பெற்றெடுத்த

கல்லறைகளே..

கலங்கரை விளக்குகளாய்

நீவிர்…

மனக்கரைகளில் நிமிர்ந்து நிற்கையில்

கார்த்திகைப் பூக்களுக்கு

கண்ணீர் விட  ஏது தேவை.?!

 

கார்கால இருளின்

மின்னல்களே

ஒளிரும் தாரகைகளாய்

நீவிர்

விண்ணெங்கும் நிறைந்திருக்க..

காட்டுச் சிறுத்தைக்கு

சிணுங்க ஏது தேவை…?!

 

தேசக் காற்றின் வாசமான

இளம் தென்றல்களே…

உயிர் மூச்சுக்களாய்

நீவிர்

சுவாசப்பைகள் எங்கும்

நிறைந்திருக்க…

எங்கள் வாகைக்கு

வாடி நிற்க ஏது தேவை..?!

 

கடல் கொண்டாடும்

அலையாகி நிற்போரே

ஓயாத அலைகளாய்

நீவிர்

உயிரோடிருக்க

தத்தித் திரியும்

அந்தச் செம்பகத்துக்கு

சோர்ந்திருக்க ஏது தேவை..??!

 

கால வெளியில்

கோலங்கள் மாறலாம்

தேசங்கள் அலங்கோலமாகலாம்

கண்மணிகளாய்

நீவிர்

கண்களை அலங்கரிக்க

கார்த்திகை தீபத்திற்கு

ஏக்கம் ஏது தேவை..?!

 

கல்லறைகளை இடிக்கலாம்

கல்வீடுகளை தகர்க்கலாம்

தார் வீதிகளை கிளறலாம்

தாரகைகளை தகர்க்க முடியுமோ..??!

மக்கள் மனங்களில்

மங்காத தாரகைகளாய்

நீவிர்

மாவீரரே உங்களுக்கு

கலக்கம் தான் ஏது தேவை..?!

 

விடியற் பொழுதின்

விசித்திரங்களே

தேசத்தின் தேவையற்றவைகள்

தகர்த்த தேகங்களாய்

நீவிர்

மக்கள்

தேவையற்ற தேவைகள்

தகர்க்கும் இவ்வேளையில்

உங்களை பூஜித்து நிற்கிறோம்

கொள்கை  வெல்வோம் என்றே..!!

Leave a comment »