Archive for தமிழீழம்

விடுதலை தேடிய பாவச் சுவடுகள்

ஆண்டுகள் ஏழு கடந்தும்..

சுவடுகளாய்

கட்டிய சேலைகளும்

காவிய பொம்மைகளும்

சீன அமிலத்தில் கரைந்து போன

எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..!

 

இலட்சியம் சுமந்த மறவர் பின்

விடுதலைக் கனவோடு

பாதம் பதித்த நம்பிக்கைகள்…

எதிரியின்

உயிர்ப்பிச்சைக்காய்

ஏங்கியே ஒதுங்கிய

அந்த மணற்றரையில்

உப்பில் கலந்து

உடல் கரைவார் என்று

யார் நினைத்தார்..!

 

கந்தகக் குண்டுகளோடு

பொஸ்பரஸ் அதுஇதென்று

ஆவர்த்தன அட்டவணையில்

அடங்கியவை எல்லாம் கொட்டி

உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி

ஓர் இனத்தின் தலைவிதியை

தலையறுத்து

சன்னங்களால் சன்னதம் ஆடிய

பூமி அது..!

 

இலைகள் உதிரலாம்

கிளைகள் முறியலாம்

தண்டுகள் சாயலாம்

ஏன் …

வேர்கள் அறுபடலாம்

ஆனால்

வித்துக்கள்

முளைக்கும்..!!

 

முள்ளிவாய்க்கால்

மண்ணில்

பாவச் சுவடுகளாய்

பாத்தியிடப் பட்டவை

பாவிகள் உடல்கள் அல்ல..

பாரினில்

ஓர் மனித இனத்தின்

சுதந்திரக் கனவுக்கான

உறங்குநிலை வித்துக்களாம்..!

 

மீண்டும் அவை

முளைக்கும்

வடிவங்கள் வேறாயினும்

வாழ்வுரிமை வேள்வியில்

அவை தீராது எழும்

மணற்றரையில் கூடியுள்ள

ஒவ்வாமைகள் வென்று…!

 

ஒற்றுமையே அதற்கு

நீர் வார்க்கும்

நெஞ்சில் நிலைக்கும் 

நினைவே அதற்கு

ஊட்டமாகும்..!

சந்ததிகள்

தாண்டியும்

அது சாத்தியமாகும்..!

அதுவரை

ஓயாமல் ஒலிக்கட்டும்

நீதிக்கான நீண்ட குரல்

இவ் வையகம் எங்கும்..!!

 

ஆக்கம் நெடுக்ஸ் (13.05.2016)

Advertisements

Leave a comment »

மகிந்த மாமா வீட்டு மைத்திரி அங்கிள்…

MR-Maithri

அலரி மாளிகை

மாடி வீட்டு மகிந்த அங்கிள்

வர்ணக் கிளி வளர்க்க

குறுனி தூவி…

ஏசி றூமில் நாய் வளர்க்க

நாய்க்கு ஒரு நாலு பெயர் வைச்சு

அழகு பார்த்த மைத்திரி அங்கிள்…

 

கொடூர சுறா வளர்த்து

குஞ்சு மீனை தீனியாக்கி

அது துடிச்சுச் சாக

துள்ளிக் குதித்து

குரூரமாய் ரசித்து

மகிழ்ந்த

கோத்தா எனும் கொடூரன்

குருவி சுடுவது போல்

தமிழனை சுட்டு தள்ள

கைக்கட்டி வேடிக்கை பார்த்த

மைத்திரி அங்கிள்…

 

செம்மணியை

தமிழர் குருதியால்

சிவப்பாக்கி..

எங்கள் தங்கை

கிருசாந்தியை

கிண்டிப் புதைத்து

அதை மறைக்க ஆயிரம்

சித்து விளையாடிய..

சந்திரிக்கா என்ற

அரக்கி வீட்டில்

தர்ப்பார் நடத்தும் மைத்திரி அங்கிள்…

 

ஜே ஆர் தாத்தாவின்

கொள்கையில் வளர்ந்த..

கொஞ்சம் கொஞ்சமாய்

ஈழத்தீவில்

தமிழரை பூண்டோடு அழிக்க

தந்திரம் படித்த

ரணில் அங்கிள் வீட்டு

படி அளக்கும் மைத்திரி அங்கிள்..

 

எம் பாட்டன் முப்பாட்டன்

நிலமெல்லாம் விழுங்கி

உயர் பாதுகாப்பு வலயம் அமைச்சு

சிங்களச் சொத்தாக்கி..

எங்கள் அண்ணா அக்காவை

கொன்று புதைத்த நிலங்களாக்கி..

வெற்றி வெடி வெடித்த

சரத் பொன்சேகா அங்கிள்

அமெரிக்க டொலரில்

குளிர் காயும் மைத்திரி அங்கிள்..

 

உங்களின் வெற்றிக்கு வாக்குச் சேர்த்த

சம்பந்த.. சுமந்திர

கூட்டம் கூட மெளனமாகி விட்டது.

அகதியாய் ஓடியாந்த தமிழருக்கு

இரட்டைக் குடியுரிமை

கூட்டமைப்பு பிரதான அரசியலாகி விட்டது.

100 நாள் கடக்க எல்லாம் சரியாகும்

பொதுத் தேர்தல் வர

எல்லாம் கைகூடும்

கதையளக்க தயாராகி விட்டது…

அந்தக் கூடார குதிப்பில்

மகிழ்ந்திருக்கும் மைத்திரி அங்கிள்..

 

எதுஎப்படியோ கிடக்கட்டும்..

மாற்றம் ஒன்று வேண்டும்

மகிந்த மாமா தொலைய வேண்டும்

எண்ணிய உள்ளங்கள்

இணைந்து அளித்த வாக்கில்

உச்சிக்கு வந்திட்டீங்க..

எங்கள் உச்சி குளிர ஒன்றும் செய்ய வேண்டாம்

குச்சு ஒழுங்கையில்

எங்கள் அக்கா தங்கையை

கணக்குப் பண்ண நிற்கும்

உங்க ஆமியை கொஞ்சம்

உள்ள நகர்த்த மாட்டியளா..???!

Leave a comment »

கார்த்திகை ஒளிர்கிறது..! (2014)

nov2

கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட..

கருவறையில் கனவுகளோடு
பிறந்தோம் – பின்
கல்லறையில் கனவுகளோடு
புதைந்தோம்..
வாழ்க்கை என்பதை
தேச விடுதலைக்காய்
வாழ்ந்து முடித்தோம்.

எமக்காக..
பசி இருக்க வேண்டாம்
கண்ணீர் சிந்த வேண்டாம் – ஏன்
மனதில்
கவலையே வளர்க்க வேண்டாம்..!
கார்த்திகை எங்கும்
எங்களுக்காய் எதுவும்..
வலிந்து தவிர்க்க வேண்டாம்..!
கண் முன்னே தொடரும்
உங்கள் தாய் மண்ணவள்
அவலம் போக்க
சித்தம் வையுங்கள்
அது போதும்..!!!

தேச விடுதலைக்காய்
போனவர் நாங்கள்…
போர் பிரியர்களாய்
உடல் சிதைந்து சாவதற்கல்ல..!
மக்கள் உரிமைக்காய்
உழைத்தவர் நாங்கள்
காட்டிக்கொடுத்து
மண்ணை சிதைப்பதற்காய் அல்ல…!!

தேசிய தலைவனின்
பிள்ளைகள் நாங்கள்..
இறுதி வரை
அவர் வழியில் நின்றோம்..!!
தலைவன் காட்டிய பாதை
தெளிந்ததாய்.. சீரியதாய்
தெரிந்தும் தெரியாமல்
பாதை மாற வேண்டாம் – அது
எம் கல்லறைகள் மீது
இயந்திரங்கள் ஏவிய
இதயமற்றவற்கு  ஈடாக்கும்.!

எதிரிகள், துரோகிகள்
மனித வேட்டையாட அல்ல
எம் அர்ப்பணிப்புக்கள்..!
மண்ணின் ஆக்கிரமிப்பை
நீக்கவே நாங்கள் போனோம்..
தடை நீக்கிகளாய்
நாங்கள் வெடித்தோம்..
அது.. தேசம் சிறைப்படுவதை தடுக்க..!

எனியும்…
கொள்கை மாற வேண்டாம்
தேச விடுதலை ஒன்றே
எமது இலக்கு
உங்கள் இலக்கு..!!
இத்தனை இழப்புகள்
இத்தனை துயர்கள்..
மன்னிப்பு என்ற
ஒற்றை வார்த்தைக்குள்
முடிக்க வேண்டாம்.!!
எம் ஆத்ம உலாவல்
தேச விடுதலையின் வேளையில்
மட்டுமே அமைதி பெறும்..
புரிந்து கொண்டு
செயற்படுங்கள்…!!!

கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட..
எம் கனவுகள் மீள்சொல்லி
மீண்டும் ஓய்கிறோம்
கல்லறைகள் அற்ற
தேச மண்ணின்
சேதனத் துணிக்கைகளாய்..!!!

Leave a comment »

வெடிக்க வேண்டும் மக்கள் புரட்சி.. மிரட்சி அல்ல..!!!

திலீபன்

விழியோரங்கள் அரும்பிய

நீர் துடைத்து

கயிற்று நிரைகளுக்குள்

அடங்கி இருக்கும்

மக்கள் கூட்டம் நடுவிருந்து

கண்கள் அவனையே நோக்குகின்றன..!

 

பின்புலத்தில்

சீறிப் பாயும் புலியா

யாழ் இந்துவின்

உண்மைப் புதல்வனா

தாய் தமிழீழத்தின்

செல்லப் பிள்ளையா

மக்கள் விடுதலையின்

ஒற்றைக் குரலா…

கேள்விகள்

அவன் கோலம் கண்டெழுகின்றன..!

 

சின்னஞ்சிறுசுகளின் மாமா..

எங்கள் அண்ணா

உங்கள் தம்பி

பலரின் பிள்ளை

சிலரின் எதிரி

சிந்தனை ஒன்றை வைத்து

உண்ணா நோன்பிருந்து

மக்களை துயில்

எழுப்பிக் கொண்டிருந்தான்..!!

 

கனவுகள் அவன்

தனக்காக கண்டதில்லை..!

சனத்துக்காக தன் சாவிலும் கூட

மேலிருந்து

விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்…

தேகத்தையே

தேசத்தில் பிள்ளைகள் படிக்க

கொடுத்தவன்..

நம்பிக்கை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

 

இன்று…

வீழ்ந்துவிட்ட அவன் அடையாளங்கள்

வீழாது வைத்திருக்கிறது

இதயங்கள் எங்கும் அவன் நினைவுகள்.!!

உயிர் உள்ள வரை

தமிழன் என்ற இனம் உள்ளவரை

அண்ணன் திலீபன் வாழ்வான்

அது உறுதி..!

 

ஆனால்…

அவன் உயிர் தந்த இலட்சியம்..

செத்து விடுமோ..

சாகடிக்கப்படுமோ…??!

வினாக்கள் விளைகின்ற காலமிதுவாகிப் போனது

துரதிஸ்டம்..!!

இந்த நிலை மாற வேண்டும்

சுதந்திர தமிழீழம் மலர வேண்டும்

அதுக்கு வெடிக்க வேண்டும்

மக்கள் புரட்சி..

மிரட்சி அல்ல…!!!!

Leave a comment »

குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது.. குடும்பிக்கார மறைவில் இருந்து…!

இது கம்பன் பாடாத

கவிதை..

தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே

தீயோடும்.. புதை குழியோடும்

தீர்ந்துவிட்ட சீதைகளின்

துயர் மறந்தோர்

கவிதை இது.

வேதனையின்..

கூக்குரல்..!

 

இதுவும் ஒரு வதை

தனக்குத் தானே செதுக்கிய..

சிம்மாசனத்தில்

இவர்..!

சிங்கள

அமைச்சரவையில்

அவர்…!!

குத்தியரின்

காசோலை அம்பு பாய்கிறது

குடும்பிக்கார மறைவில் இருந்து.

வாலி அங்கும்

வீழ்கிறான்..

இராமன் இங்கும்

வெல்கிறான்..!!

 

அதர்மம் அழித்து

தர்மம் வென்றதாய்

காட்ட

ஒரு காசோலை மட்டும்

பரிமாறப்படுகிறது..

மீண்டும் வரலாறு

திரித்து எழுதப்படுகிறது…!

 

கம்பனுக்கு

அன்று..

வாலி புகழ்

திரித்து

இராம புகழ் பாட

கவி… பாட

கள்ளிருந்தது

தான் பெருங் கவி எனும்

புகழ் விருப்பிருந்தது

கூட அகத்தே

பெரும் திமிர் இருந்தது..!

 

இந்தக்

கள்ளன்களுக்கு

துதிபாட

தமிழர் துயர்

மட்டுமே இருக்குது..!

உள்ளத்தே

ஈடேறா..

விருப்புக்களோ

இந்து மகா சமுத்திரம்

அளவு இருக்குது…!!!

 

தாய் மண்ணை

போர் தின்ற வேளையிலும்

இராம – இராவண

காவியம் பாடி

கருத்தைச் சிதைத்தோர்..

இன்று

கொழும்பில்

சிங்களச் சீமையில்..

கவி பாடி தாம் இருக்க..

தாடி எதிரி துதிபாடி

கவிழ்த்ததாம் புலி

என்று

இறுமாப்புக் கொள்கிறார்.!

 

பனைமரக் காட்டிடை

இறக்கை உலர்த்த

காக்கை ஒன்று

பழமிருக்க

கொண்டை அவிழ்ந்து வீழ்ந்ததாம்

பழம்.

கொண்டை அங்கே

குதூகலித்ததாம்

வீழ்த்தினோம்

சொந்த உறவை என்று.

எங்கிருந்தோ வந்த

காக்கை அங்கே

இதயம்

கனத்து நின்றதாம்..!

பழமோ

விதையான சந்தோசத்தில்

மண்ணோடு

புதையுண்டு போனதாம்.!

 

இங்கே..

கொண்டை ஒன்றின்

குடும்பி பற்றி

தாடி ஒன்று

வதம் செய்கிறது

எதிரி கூட

நின்று செய்தது

போதாதென்று

இன்னும்..

சொந்த இன

வதம் தொடர்கிறது.

சொந்த வயிறு வளர்க்க

தேவை அது என்பதால்..!

 

ஆனால்..

வீழ்ந்தது

வீழ்த்தியது..

புலி என்று

பசப்பி நிற்குது.

மக்கள்

உரிமை வென்றது

என்று

ஊருக்கு நரி காட்டி நிற்குது.

 

இலக்கியம்

வசனம் அதை

மறைத்து நிற்க

கம்ப கோட்ட வாசலில்

வழிந்தோடும்

தமிழர் இரத்தம்

இன்னும் காயாத

ஈரமாய்..!

மறைக்க

மறக்க முடியா

துயராய் அது..!

 

தீக்குளிக்க

சீதைகளே இல்லாத

தேசமாய் போனது

சிங்களச் சேனைகளால்

சொந்த தேசம்.

சிந்திப்பாரா..

ஏசி மேடையில்..

இராம வசனம் பேசி

எதிரி கூடாரம் இருந்து..

தமிழர் உரிமை

மீட்போர்..!!!

 

குடுமி

Leave a comment »

ஆச்சி எடன அரிவாளை..

பொங்கல்

ஆச்சி எடன அரிவாளை..

எதுக்கடா பேராண்டி

பொங்கலுக்கு

புதுக்கதிர் எடுக்கவோ..?!

இல்லையன ஆச்சி

இனமானப் போரில்

பொட்டிழந்து பொலிவிழந்து..

குளிக்கும் உன்னைக் கூட

கணக்குப் பண்ணும்

சிங்கள நாய்களை போட்டுத்தள்ள…!

 

விடுடா அது

அவன் பிறவிக் குணம்..

இல்லையன ஆச்சி

தமிழர் நாங்கள்

புலியாய் பாய

பயந்தோடிய தெருநாய்கள்

உலக உருண்டையின்

பொய் நயத்தால்

வெற்றிக் கோசம் சேர்த்து

எம்  தேசம் மேய்கின்றன.

இன்னும் என்னை

சும்மா இருக்கச் சொல்லுறியோ..??!

 

தம்பி ராசா..

பொங்கிய இரத்தம் போதும்

செத்து வீழ்ந்ததும் போதும்

வீரம் விவேகம் விளையாடினதும் போதும்

எனிக் கொஞ்சம்

இராஜதந்திரம் படிக்கட்டும்

எம் இனம்

சும்மா கிடவடா..!

 

என்னன  ஆச்சி சொல்லுறா

கண் முன்னால

அநியாயம் கண்டும்…

இமை மூடி

சும்மா கிடவென்றோ வெருட்டுறாய்..??!

இல்லையடா பேராண்டி

அப்புவைப் போல

உன்னையும் தொலைக்க

எனக்குத் தைரியம் இல்லை.!

வம்சத்தின் ஒரே

எஞ்சிய வாரிசு நீ..!

நீயும் தொலைந்தால்..

இனம் நிலம் என்னாகும்..??!

 

அமைதியாக் கிடந்து

என்னன  ஆச்சி செய்யுறது..

எங்கட சனத்தையே

எட்டப்பனாக்கி

எங்களையே மோத விட்டு

எதிரி எப்படி வென்றானோ

எனி..

நாங்களும் அதையே செய்வம்…!

 

இப்ப பொங்கலுக்கு

நீ…

நாலு புதுக்கதிர் எடுத்து வா..

புலிகள் வீழ்ந்த மண்ணில்

களைகள் கூட முளைக்காத

வயல்களில் விளைந்த

கதிர்களடா அவை.

பொங்குவோம் அதனால்..

விடியும் வரை

பொங்கு தமிழரே பொங்கு

பொங்கு தமிழே பொங்கு என்று..!

Comments (2) »

அண்டையில் இருக்கும் அசிங்கமே அநியாயமே..!

முள்ளிவாய்க்கால்1

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே

87 இல் ஈழத்தில்

தமிழனைக் காப்பதாய்

படைகள் கொண்டு வந்தாய்

சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய்

இருந்தும் அவன்

வால்பிடித்து கரம் குலுக்கி

அடித்தவனைக் காத்தாய்..

நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..!

 

வரவேற்று..

பூமாலை போட்ட தமிழனை

“பூமாலை” என்ற பெயரில்

படைகள் ஏவிக் 

கொன்றாய் குவித்தாய்..!

சொந்த இனத்தைச் சூறையாட

கூலிகளை வளர்த்தாய்

இறுதில்

சுருட்டியதோடு

கூட்டிக் கொண்டு ஓடினாய்..!

 

நீண்ட தொல்லை இது

துரத்தாமல் தீராது என்றே..

வீரப் புலிகள் விரட்டி அடிக்க

ஓடிய நீ…

மீண்டும்…

கொல்லைப்புறந்தில்

இருந்து கொண்டு

முள்ளிவாய்க்காலில்

சிங்களத் துணையோடு

வேட்டைகள் ஆடினாய்..!

 

தமிழர் சாவினில்

அரசியல் செய்தாய்

காந்தியம் பேசினாய்

ஜனநாயகம் பசப்பினாய்

சீனனுக்கு அஞ்சிய நீ

தமிழரிடம் வீரம் காட்டினாய்

பிராந்திய

வல்லாதிக்கம் வளர்த்தாய்..!!

 

நீதிகள் மறைத்தாய்

செய்திகள் தவிர்த்தாய்

உண்மைகள் கொன்றாய்

தமிழக

தொப்புள் கொடி உறவுகள்

வாய்கள் அடைத்தாய்

கண்கள் கட்டினாய்

கால்கள் மறித்தாய்

சிறையில் அடைத்தாய்..!

 

சினிமாச் சித்திரங்களை

சிகரத்தில் இருத்தியற்காய்

அவர்களும் அங்கலாய்த்தனர்

தீர்வுகள்  தேடி  ஓடினர்

கெஞ்சினர் கூத்தாடினர்

சொந்த மண்ணில் அடிமைகளாய்..!

 

ஈழத்தமிழன் தான்

சோரம் போய்

இருப்பை இழந்தான் என்றால்

அரைகுறையாய் ஆள வழி இருந்தும்

ஆட்சியை இழந்து

தமிழகத் தமிழன் அவதியானான்..!

 

இன்றும் அதை

ஹிந்திய ஒருமைப்பாடு என்ற

அசிங்கத்தால்

வேலி தகர்த்து

மானுட உணர்வுகள் கொய்து

சோழன் செழித்த தஞ்சையில்

முள்ளிவாய்க்கால்

முற்றத்தில் காட்டி நின்றாய்..!

 

மீண்டும்

கொன்றாய்.. சிதைத்தாய்..

சுயநலப் பேய்களை ஏவி

தமிழர்களை

சிலையாயும் வாழவிடன் என்கிறாய்..!!

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே..

உனக்கு மனச்சாட்சியே இல்லையா..??!

 

வலிந்தவன் எல்லாம்

வா வா என்று வட முனையில்

போருக்கு அழைக்க

பயந்து ஓடி

தென்முனையில்

அடைக்கலம் தேடும் கோழையே

தமிழனிடம் மட்டும் தானா

உன் உளவும்

வீரமும்..!

 

ஹிந்திய தேசமே

தெரிந்து கொள்..

சோழப் பெரும்படை

மீண்டும் கிளம்பும்

தெற்கும் வலிமை பெறும்

அங்கும் நீ

கிலியெடுத்து ஓடும் நாள் வரும்..!

அதுவரை எனி

பொறுமையின் உச்சம் எய்திட்ட

தமிழினம் தூங்காது..!

Leave a comment »