Archive for காதல்

நான் ஏழை வீட்டுப் பிள்ளை.. கிடுகு வீட்டுக் கிள்ளை.

girl-propose-to-guy

நான் ஏழை வீட்டுப் பிள்ளை

கிடுகு வீட்டுக் கிள்ளை

கிட்ட வந்து தொட்டு நிற்க..

எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்…

 

ஏடும் எடுத்ததில்லை

ஏரெடுத்த அழுக்கும் கலைஞ்சதில்லை

ஏர்போட் ஏறி இறங்க

எடி நான் உனக்கு ஏற்ற ஆளாய் வரமாட்டேன்..

 

பாடமும் படிச்சதில்லை

பட்டமும் பெற்றதில்லை

பகட்டும் எனக்கு இல்லை..

எடி நான் உனக்கு ஒத்துவரமாடேன்..

 

நான் ஏழை வீட்டுப் பிள்ளை

கிடுகு வீட்டுக் கிள்ளை

கிட்ட வந்து தொட்டு நிற்க..

எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்…

 

****

 

வாசலில் வாடி நிற்கும் செவ்வரத்தை நான்

மடி மீது ஊஞ்சல் கட்ட

மாதுளை உனக்கு மன்னன் மகனும் அல்ல

எடி நான் உனக்கு என்றும் தோதாய் வரமாடேன்

 

காவல் காக்க நான் நாயும் இல்லை

உன் காலடி சுற்றிவர பூனையும் இல்லை

கட்டிலில் கிடக்க தவிக்க நான் தலையணையுமில்லை

எடி நான் உனக்கு ரெடிபயராய் கூட வரமாட்டேன்..

 

நான் ஏழை வீட்டுப் பிள்ளை

கிடுகு வீட்டுக் கிள்ளை

கிட்ட வந்து தொட்டு நிற்க..

எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்…

 

****

 

எட்ட நில்லு கண்ணே

கண்ணோடு கண் மட்டும் வைச்சுக்கலாம்

கிட்ட வந்து என்னை கிஸ் அடிக்க

எடி நான் கெட்டவன் ஆகவும் வரமாட்டேன்..

 

முத்தும் இல்லை முல்லையும் இல்லை

பத்தும் இல்லை பதவியும் இல்லை எனக்கு

பறந்தாலும் நான் ஊர்குருவி பருந்தாகவும் இல்லை

எடி நான் உனக்கு ஏத்த ஜோடியாய் வரமாட்டேன்..

 

நான் ஏழை வீட்டுப் பிள்ளை

கிடுகு வீட்டுக் கிள்ளை

கிட்ட வந்து தொட்டு நிற்க..

எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்..

 

****

 

பாட்டாய் படிச்சுப் பார்க்கிறியோ

கவிதையாய் கிசு கிசுத்துக் கிழிக்கிறியோ

உனக்கு பொழுதுபோக்க

எடி நான் நல்ல பொழுதாய் வரமாட்டேன்..

 

கிட்ட வந்து எட்டப் போக நிலவரம் இல்லை

நிலவாய் எப்பவும் எட்ட நில்லு பெண்ணே

எட்ட நினைக்கும் மேகமாய்

ஏமாந்து குளற நான் ஏமாளியாயும் இல்லை

எடி நான் குற்றம் சுமக்க கூட வரமாட்டேன்..

 

நான் ஏழை வீட்டுப் பிள்ளை

கிடுகு வீட்டுக் கிள்ளை

கிட்ட வந்து தொட்டு நிற்க..

எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்..!!!

Leave a comment »

நித்திரையை குலைத்தவள்..!

புதியவள் ஒருத்தி

என் அறையில் என்னோடு..

நடு நிசியை நோக்கி

நேரம் ஆகிறது..

படுக்கைக்குப் போக..

விளக்கை அணைக்கவா

இல்லை விடவா..

உள்ளம் தடுமாறுகிறது…!

 

உள்ளூர ஒரு பயம்

என்னை அணுகுவாளா

உயர நகர்வாளா

பின் என் உடல் மீது பாய்வாளா..

அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??!

அனுபவமின்றியவன் நான்

சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்…

 

அவளோ

என் அறைக்குள்

துணிவோடு..

அனுமதி இன்றி நுழைந்தவளாய்

சுவரோடு ஒட்டியவளாய்

நகர்வின்றி…

என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள்

அதை அழைப்பு என்பதா

எச்சரிக்கை என்பதா..??!

சிந்தனை குழம்புகிறது..!!

 

போனால் போகுது

எனியும்..

விடுவதில்லை இவளை..!

விட்டால்

என் நித்திரை இன்றி இரவுகளுக்கு

யார் பதில் சொல்வது..??!

 

நொடிகளை வீணாக்காமல்

அவளை நெருங்குகிறேன்

நகர்வின்றி நின்றவள்

நகர முனைகிறாள்

திமிர முனைகிறாள்..

நானோ விடுவதாக இல்லை

ஒருகை பார்த்தே விடுவது

என்ற துணிவில்..

 

அவளோ

அதுவரை அஞ்சமின்றி நின்றவள்

அசந்து போகிறாள்

கண்களில் பயத்தைக் கொட்டிறாள்

உடலை நெளித்துக் கொள்கிறாள்

கால்கள் நகர்ந்து ஓட முனைகின்றன..

 

என் கண்கள் இவற்றை ரசிக்க

என் மூளை

அவளுக்கு இரக்கம் காட்டுகிறது.

சரணாகதி அடைபவளை

கஸ்டப்படுத்துவது

காருணியமே அற்றது..

போதனை செய்கிறது..!

 

இருந்தாலும்

தொலைய இருக்கும்

சந்தர்ப்பங்களை எண்ணிய

மனசு

முடிவெடுக்கிறது..

நினைத்ததை

முடித்தே விடுவது என்று.

 

கிட்ட நெருங்குகிறேன்

கையில் ஒரு கவிதைக் கொப்பி..

நீட்டுகிறேன்

அவளோ விலத்தி

ஓடினாள்

பாய்ந்து வீழ்ந்தாள்

நானோ

அலறி அடித்துக் கொண்டு

அறையை விட்டே ஓடினேன்…

ஓடினேன்.. ஓடினேன்

வீட்டின் வாசல் வரை ஓடினேன்..!

 

நித்திரை இன்றிய

இரவோடு

நிம்மதியும் தொலைந்தது.

தேடுதல் வேட்டையும் கூடவே

சேர்ந்து கொண்டது.

தொலைந்து போனவள்

எங்கே பதுங்கினாளோ

எப்ப பாய்வாளோ..

இன்னும்.. விடையின்றிய நொடிகளோடு

பதட்டம் இருப்பதால்..

பயத்தை மறைக்க

பதிகிறேன் இதனை..!

 

எல்லாம்..

புது அனுபவமாய்..

முதல் அனுபவமாய்..

அதைத் தந்தவளாய் அவள்..

இதோ..!!

spider

Leave a comment »

மின்னணுவுக்குள் மின்னிய காதல்..!

b-flower

மலரோடு நேசம் வைக்க

குருவிக்கு கற்றுத் தரத் தேவையில்லை..

 

நிலவோடு நேசம் வைக்க

வானுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை..

 

இதழோடு நேசம் வைக்க

முத்தத்துக்கு எச்சில்கள் தேவையில்லை..

 

சூரியனோடு நேசம் வைக்க

சூரியகாந்திக்கு மின்னஞ்சல் தேவையில்லை..

 

தென்றலோடு நேசம் வைக்க

தோப்புக்கு பேஸ்புக் தேவையில்லை..

 

காலத்தோடு நேசம் வைக்க

வாழ்க்கைக்கு செல்போன் தேவையில்லை..

 

கருவோடு நேசம் வைக்க

இலத்திரனுக்கு புவிஈர்ப்பு விசை தேவையில்லை..

 

என்னோடு  நேசம் வைக்க..

மின்னணுக்களில் மின்னிய உன் காதலை அழிக்கத் தேவையில்லை..

காரணம்…

உன் மின்னணுக்கள் என் உடலணுக்கள் எங்கும்

நிலைபெற்று விட்டதால்..!

Leave a comment »