Archive for ஈழத் துயர்

அண்டையில் இருக்கும் அசிங்கமே அநியாயமே..!

முள்ளிவாய்க்கால்1

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே

87 இல் ஈழத்தில்

தமிழனைக் காப்பதாய்

படைகள் கொண்டு வந்தாய்

சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய்

இருந்தும் அவன்

வால்பிடித்து கரம் குலுக்கி

அடித்தவனைக் காத்தாய்..

நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..!

 

வரவேற்று..

பூமாலை போட்ட தமிழனை

“பூமாலை” என்ற பெயரில்

படைகள் ஏவிக் 

கொன்றாய் குவித்தாய்..!

சொந்த இனத்தைச் சூறையாட

கூலிகளை வளர்த்தாய்

இறுதில்

சுருட்டியதோடு

கூட்டிக் கொண்டு ஓடினாய்..!

 

நீண்ட தொல்லை இது

துரத்தாமல் தீராது என்றே..

வீரப் புலிகள் விரட்டி அடிக்க

ஓடிய நீ…

மீண்டும்…

கொல்லைப்புறந்தில்

இருந்து கொண்டு

முள்ளிவாய்க்காலில்

சிங்களத் துணையோடு

வேட்டைகள் ஆடினாய்..!

 

தமிழர் சாவினில்

அரசியல் செய்தாய்

காந்தியம் பேசினாய்

ஜனநாயகம் பசப்பினாய்

சீனனுக்கு அஞ்சிய நீ

தமிழரிடம் வீரம் காட்டினாய்

பிராந்திய

வல்லாதிக்கம் வளர்த்தாய்..!!

 

நீதிகள் மறைத்தாய்

செய்திகள் தவிர்த்தாய்

உண்மைகள் கொன்றாய்

தமிழக

தொப்புள் கொடி உறவுகள்

வாய்கள் அடைத்தாய்

கண்கள் கட்டினாய்

கால்கள் மறித்தாய்

சிறையில் அடைத்தாய்..!

 

சினிமாச் சித்திரங்களை

சிகரத்தில் இருத்தியற்காய்

அவர்களும் அங்கலாய்த்தனர்

தீர்வுகள்  தேடி  ஓடினர்

கெஞ்சினர் கூத்தாடினர்

சொந்த மண்ணில் அடிமைகளாய்..!

 

ஈழத்தமிழன் தான்

சோரம் போய்

இருப்பை இழந்தான் என்றால்

அரைகுறையாய் ஆள வழி இருந்தும்

ஆட்சியை இழந்து

தமிழகத் தமிழன் அவதியானான்..!

 

இன்றும் அதை

ஹிந்திய ஒருமைப்பாடு என்ற

அசிங்கத்தால்

வேலி தகர்த்து

மானுட உணர்வுகள் கொய்து

சோழன் செழித்த தஞ்சையில்

முள்ளிவாய்க்கால்

முற்றத்தில் காட்டி நின்றாய்..!

 

மீண்டும்

கொன்றாய்.. சிதைத்தாய்..

சுயநலப் பேய்களை ஏவி

தமிழர்களை

சிலையாயும் வாழவிடன் என்கிறாய்..!!

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே..

உனக்கு மனச்சாட்சியே இல்லையா..??!

 

வலிந்தவன் எல்லாம்

வா வா என்று வட முனையில்

போருக்கு அழைக்க

பயந்து ஓடி

தென்முனையில்

அடைக்கலம் தேடும் கோழையே

தமிழனிடம் மட்டும் தானா

உன் உளவும்

வீரமும்..!

 

ஹிந்திய தேசமே

தெரிந்து கொள்..

சோழப் பெரும்படை

மீண்டும் கிளம்பும்

தெற்கும் வலிமை பெறும்

அங்கும் நீ

கிலியெடுத்து ஓடும் நாள் வரும்..!

அதுவரை எனி

பொறுமையின் உச்சம் எய்திட்ட

தமிழினம் தூங்காது..!

Advertisements

Leave a comment »

உதிர்ந்த பல பூக்களில் ஒற்றைப் பூ இசைப்பிரியா..!

Issaipriya2

 

ஆரியச் சக்கரவர்த்தி

ஆசோகனின் காடைக் கடையன்

விஜயன் பரம்பரையில்

உதித்த சிங்கள தேசத்தில்

50 களில்

தமிழ் பெண்கள் மார்பறுத்து

கொதி தார்  ஊற்றி…

அனல் தணல் மீது விட்டெறிந்து

கொடுமை செய்து..

கூடி நின்று கேலி செய்து

வெற்றிக் கோசம் போட்டு

மகிழ்ந்த கூட்டம்…

83 இல்

அதையே அகலப்படுத்தி

தமிழச்சிகள் சேலை களைந்து

மானபங்கப்படுத்தி

தமிழர் குடியையே

ஆடை இன்றி விரட்டி அடித்து

மகிழ்ந்து நின்று..

மகாவம்சம் வழி

வீரம் பேசிக் கொண்டது.

 

அந்தக் காடைக் கழுதைகளை

காட்டேரிகளை..

இராணுவம் என்ற பெயரில்

உலக நாடுகள்

அள்ளி வழங்கிய

கொலைக்கருவி கொடுத்து

தமிழர் பகுதிக்கு

அனுப்பி வைத்தான் ஜே ஆர்..!

 

ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி

தொடங்கி

ஒப்பரேசன் லிபரேசனில்

தமிழ் பெண்கள் வீடு புகுந்து

சீரழித்தது வரை

அது தொடர்ந்தது தொடர்கதையாய்..!

தமிழ் கணவான் அரசியல்வாதிகளும்

வட்டம் என்றும் சதுரம் என்றும்

குந்தி எழும்பி

கூடித் தின்று.. முடித்தார்

கூட்டுக் கதை..!

 

அன்னை இந்திராவின்

புதல்வனும்

பத்தாக்குறைக்கு

அனுப்பி வைத்தான்

ஹிந்திய ஜவான்களை..!

சிங்களம் விட்டதை

தொட்டுத் தொடர்ந்து

முடித்துவா.. காட்டிவா

அசோகனின்

ஆரிய வீரத்தை

தமிழ் பெண்டிரிடம் என்றிட…

ஏவல் படையும்

ஆயிரக்கணக்கில்

தமிழ் பெண்கள்

கற்புத் தின்று

ஏப்பம் விட்டு வெளியேறியது..!

கணக்கில் காட்சியில்

அவை அடங்காததால்

உண்மைகளை ஊமையாக்கும்

கேடுகெட்ட ஜனநாயக உலகில்

அமுங்கிப் போயின சாட்சிகள்..!

 

மீண்டும்..

சிங்களம் முறுக்கேறி

முற்றாக

முடித்துக் கட்ட தொடங்கியது

விட்ட இடத்தில் தொடர்கதை..!

பிரேமதாச.. டிங்கிரி பண்டா

என்று போய்..

சந்திரிக்கா அம்மையார்

செம்மணியில் வைத்து

பள்ளி மாணவி

கிருசாந்தி என்ற மகளை

வெட்டை வெளியில்

துகில் உரிந்தார்… தொடக்கி வைத்தார்

தொடர் நாடகம்..!

அந்த வரிசையில்

வந்த பலரில்..

சகோதரி கோணேஸுவரியை

காடைக்கும் கைக்குண்டிற்கும்

பலியிட்டார்..!

போதாக்குறைக்கு

ஒட்டி நின்ற ஒட்டுக்குழு

ஓநாய்களும் பங்கு பிரிச்சு

சொந்தச் சகோதரிகள் உடை கிழிக்க..

பொத்துவில் தொடங்கி

தொண்டமனாறு வரை

ஊரே வன்புணர்வில்

அல்லோல கல்லோலப்பட்டது..!

 

இறுதில்

மகிந்த வந்தான்

தம்பி பரிவாரங்களுடன்..!

வாகரையில் தொடங்கி

முள்ளிவாய்க்கால் வரை..

தமிழ் பெண்கள்

சிங்களப் படைகளின்

இச்சைக்கு விருந்து..

பப்ளிக்காச் சொல்லி

படையல் செய்தார்கள்..!

அந்தச் சுழலில்

சிக்கிச் சீரழிந்த

பல்லாயிரம் பூக்களில்

ஒற்றைப் பூத்தான்

எங்கள் இசைப்பிரியா..!

 

அவளே

65 ஆண்டு கால

இன அழிப்பில்

மெளனமாகிப் போன

பெண்ணியப் பொய்யர்களின்

கூட்டுக் குதூகலிப்பில்..

தமிழ் பெண்களின்

கொடு நிலைக்கு

பதியப்பட்ட

காணொளிச் சாட்சியாகியும் உள்ளாள்.

 

காணாமல் போன

காட்சிகள் சாட்சிகள்

மறந்து மறைத்து

மீண்டும் கணவான் அரசியல்

சித்தர்கள்

முணுமுணுக்கின்றார்..

சிங்கள “ஜனாதிபதி “

விசாரிக்க வேண்டுமாம்..!

ஏதோ விசாரித்து

நீதியும் தர்மமும் நிலைநாட்டிய

கணக்கில் வெட்டிக் கதையளப்பு..!

கண்கெட்ட பாதகர்கள்

இவர்களே

இத்தனை கொடுமைகளும்

தொடரக் காரணம்..!

தன் மகளும்

தர்ம பத்தினியும்

பத்திரமாக வெளிநாட்டில்

என்ற திமிரில்

அவர்களுக்கு இது

பொழுதுபோக்கு.. அரசியல்..!

 

கேடு கெட்ட

மானுட உலகே..

இன்னும் என்ன வேண்டும்

சாட்சியாய்.. நீ நடவடிக்கை எடுக்க..???!

உண்மையைச் சொன்னால்..

இசைபிரியா என்ற பூவோடு

இந்தக் கதை முடியாது..!

காடைகள் கூட்டம்

கையில் அதிகாரமும் ஆயுதமும்

உள்ளவரை..!

அதைக் களையாமல்

இல்லை

மானுட உலகில்

உயிர்க்கும் மானத்திற்கும்

உரிமைக்கும்…

உத்தரவாதம்..!

 

Leave a comment »

யாரையடா விசாரிக்கக் கோருகிறாய்..??!

1996 இல்

சந்திரிக்காவின் வெற்றிக்கு

பள்ளி சிறுமியவள்

கிருசாந்தி என்ற பிள்ளையை

சிங்கள நாய்களுக்கு

பரிசளித்துக் கொன்றாயேடா

செம்மணியில்

அதைப் புதைத்தும் நின்றாயேடா

அன்றும் சாட்சியாய் நீயே..!!

 

வேலணையில்

வைத்திய சேவகியை  தாதியை

புங்குடுதீவில்

சாரதாம்பாள்,தர்மினியை

உன் காலடியில்

தின்று கொன்று

புதைக்க  கூட்டாகி

நின்றாயேடா

அங்கும் சாட்சியாய் நீயே..!

 

நெடுந்தீவுப் பூமகள்

லக்சினியை

இளஞ்சிட்டை

உன் சொந்தக் கூலியை

ஏவித் தின்று கொன்றாயேடா

நேற்றும் சாட்சியாய் நீயே..!

 

இப்படி..

ஆயிரம் ஆயிரம்

எம் தங்கைகளை அக்காக்களை

கண்முன்னே சீரழிதவன் நீ..

அங்கெல்லாம்..

மெளனம் காத்து

கொடூரருக்கு உதவி நின்றவன் நீ..

 

இசைப்பிரியா என்ற மகள்

அழிவதை சிதைவதை

வேடிக்கை பார்த்தவன் நீ

இன்று..

நீலிக்கண்ணீர் வடிக்கிறாய்

தின்றவனை

ஏப்பம் விடுபவனை

நீதி தருவான் என்று

நம்பச் சொல்கிறாய்..

அதிலும் சாட்சியாய் நீயே..!

 

சிங்கள

எசமான விசுவாச

விலங்கே

நீ இன்னும்

உயிர் வாழ்வதே

கேடடா இந்த மானுட உலகிற்கு..!

தொலைந்து போ

இன்றேல் ஊமையாய் போ..!

 

இழந்ததை மீட்க

மானம் உள்ளோர்

மனிதாபிமானம் உள்ளோர்

வருவாராடா – உன்

எசமானர் காலடி தேடி..!

காலம் ஓர் நாள்

நீதி தந்து

உங்கள் குரல்வளைக்கு

தீர்ப்பெழுதும்..!

 

[செய்தி: இசைப்பிரியா படுகொலை பற்றி ராஜபக்ச நீதியான விசாரணை நடத்த வேண்டுமாம்: டக்கிளஸ் தேவானந்தா என்ற சிங்களக் கூலி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு.]

Leave a comment »

யாழ் தேவி.. ஒரு பாழ் தேவி..!

Elephant_Pass_rusting_tank.jpg

 1993….

சிங்களரும் தமிழுரும்

மரமும் கொடியும்

சிந்தனை செய்து

டிங்கிரி பண்டா

தமிழின அழிப்புக்காய்

ஏவி விட்ட

ரஷ்சிய டாங்கிகளின்

அணிவகுப்பாய்

யாழ் தேவி….!

ஆனையிறவு தாண்டி

கிளாலி வெளியில்

புலிப் பாய்ச்சலில்..

தடம்புரண்டு போச்சுது அது..!

 

தோல்விக்கு விலையாக

சங்கத்தானையில் போட்ட

விமானக் குண்டில்

பலியான தமிழினம்

இன்னும் அலறுது

வேதனையில்…!!

 

1234346_222566421242442_1310816827_n.jpg

2013…

முள்ளிவாய்க்கால்

இன அழிப்பின் நாயகன்…

“வடக்கின் வசந்தம்”

மகிந்த சிந்தனையின்

பிறப்பிடம்..

மகிந்த பண்டா

ஏவும் இந்த

வெற்றி மமதை யாழ் தேவி

ஹிந்தியத் தடமதில்

சீன உருவமாய்

தடமுருண்டு வந்தாலும்

தமிழர் நிலத்தில் – அது

ஓர் பாழ் தேவி..!

 

இதன் வரவில்

பாழாகப் போகுது

எம் தமிழ் தேசம்..!

விபத்தில் ..

தமிழர் உயிர் பறித்து

தடத்தில்

தமிழர் நிலம் பறித்து

வழியில்…

தமிழர் பணம் பறித்து

நிலத்தில்..

தமிழர் பண்பாடழித்து

தொடரும் இது

இன்னொரு இன அழிப்பு..!

சிங்களத்தின்

புதிய அத்தியாயத்திற்காய்

புறப்பட்டு விட்டது

ஹிந்திய வழிகாட்டலில்..

இந்தச் சீனத்து டாங்கி ..!

Leave a comment »

அநாதையாய் வீழ்ந்தவின் அழுகுரல் கேட்கலையோ..?!!

Senthilkumaran_Ratnasingam_104621_200.jp

 

ஒற்றைப் பேச்சில்

ஒடிந்தே போனான்..!

இனத்துக்காய் வீழ்ந்தோரை

தூற்ற நீ யார்..??!

கேள்விகள் கேட்க

யாருமற்ற நேரத்தில்

அவனுக்குள்

ஆயிரம் கேள்விகள்..!

 

அகோரமாய்

தேசத்தில் நடந்ததை

தரிசித்தவனுக்கு…

ஊமையாகித் துணை நின்று

அழித்தவனின் செயல் பாராட்டி

சாகடித்துப் பின்…

மனித உயிர்க்கான உரிமைகள் தேடும்

“உண்மையை”க் கண்டறிவோரின்

வேடங்கள் அவனுக்குப் புரியவில்லை..!

வெகுண்டு எழுந்தவன்

வேதனையில் துடித்தான்…!

 

தன்னின மக்களுக்காய்

குண்டு சுமந்த

மண்டேலாவுக்கு

ஒரு நீதி..!!!

“உலக அமைதிக்கென்று”

பசப்பி

உலகை அடிமையாக்க..

ஊரூராய் குண்டு போடும்

ஒபாமாவுக்கு

நோபல் பரிசு..!

சொந்த மண்ணில்

இன அழிப்பை

தடுத்து நின்றவனுக்கு

“பயங்கரவாதிப்” பட்டம்…!

அந்தப் பட்டம்

அவனுக்குப் பட்டது

அநியாயமாய்

கொதித்தான் உணர்வுகளால்

தனிமையில்..!

 

ஊருக்கு

கொலிடே போவோரின்

ஆசைக்குள்

அம்மையாரின் குரல் கேட்டு..

கேள்விகள் முளைக்க

எங்க நேரமிருக்குது..!

புகலிடத்தில்..

குழுச் சண்டைக்குள்

சோர்ந்து போய்

போர்வை விரித்துத்

குரட்டை விடுவோருக்கு..

வேள்வியின் வேளையில்

விடிவுக்காய்

உயிர் தந்து போனோரை

ஈவு இரக்கமற்ற

“பயங்கரவாதிகள்” ஆக்கிய

சாணக்கிய பேச்சு

கேட்டிருக்க நியாமில்லை..!

 

உள்ளக் குமுறலின்

உணர்வை அடக்கி

கும்மாளம் போட

பாவி அவனுக்கு

சுழியத்தனமும் இருக்கவில்லை..!

அப்பாவித்தனமாய்

உலகிற்கு ஓர்

சேதி சொல்ல

உயிர் மூச்சில்

உயில் எழுதப் புறப்பட்டான்..!

தன் உடல் எரித்து

ஜெனிவாவில்..

அநாதையாய் வீழ்ந்து

செந்தில்குமரன்

அதைச் செய்தான்..!

 

இருந்தும்..

அவன் அழுகுரல்

கேட்பாரின்றி..

செவிடராகிப் போனாரே

தமிழர்கள்…!

தமிழினத் தூண்களே

சுயநலப் பிசாசுகளே..

இன்னும் உங்கள்

உறக்கம் தீரலையோ..???!

வீழ்ந்தவன்

அழுகுரல் கேட்கலையோ..??!

எந்த வேளைக்காய்

காத்திருப்பதாய்

எனி கதைவிடப் போகிறீர்கள்..??!

 

உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு

நீங்கள்

உறங்கிவிடுவீர்கள்..!

உல்லாசம் காண

எதிரிக்கு வளைந்துநெளிந்து..

ஊருக்கும் போய் வருவீர்கள்..!

 

உங்கள் இந்த நாடகத்தில்

உண்மையாய்

உணர்வுகள் ஏந்திய

இன்னும் எத்தனை

அப்பாவி உயிர்களை

பலியிடப் போகிறீர்கள்..?!

 

அஞ்சலிகள் கூட இன்றி

அவர் வாழ்வும்

அடங்குவது தான்

விதியாமோ…?!

வீதியில் எரிந்து வீழ்ந்தோருக்கும்

மனித உரிமைகள் உண்டு

உள்ளக் கிடக்கைகள் உண்டு..

“ஈவு இரக்கமுள்ள”

ஐநாவின்

அம்மையாரிடம்

கண்டால்..

எடுத்துச் சொல்லுங்கள்..!

அது போதும்

உங்களை நம்பி

அநியாயமாய் செத்தவற்கு

செந்தில்குமரன்களுக்கு

அஞ்சலி செய்தாய்

அது  இருக்கும்..!!

 

[படம்: தமிழ்நெட்]

 

Self-immolated Senthilkumaran called for mass struggle to achieve Tamil Eelam..!!!

Leave a comment »

திருநெல்வேலியில் வெடி வெடிக்க கொழும்பில் பற்றி எரிய கனடாவில் போய் நின்றது தாயகக் கனவு.

544626_481490591878556_1733616607_n.jpg

(1983 யூலைக் கலவரம். கொழும்பு, இலங்கை. இதில் 3000 வரை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.)

 

ஆச்சியின் காத்திருப்பு.

சொந்த மகளின்

தாலி தொடங்கி

பேத்தியின் கம்மல் வரை

ஆச்சியின் மடிப்பெட்டிக்குள்

கூப்பன் மட்டையோடு

கசங்கிக் கிடந்தன.

வட்டியில்

வயிறு வளர்க்கும்

அடகுகடை ஆறுமுகத்திடம்

சரணடையக் காத்திருந்தன.

 

ஆச்சியோ ஓரமாய்

குந்தி இருந்து..

கற்பனை வளர்க்கிறாள்.

இந்தப் போகம்

மேடை பார்த்து

நல்ல போயிலை

மண்டைதீவு போய்

வாங்கி வந்து..

கோப்பை போட்டு

உழுத நிலத்தில்

நட்டு அதை

குழந்தை போல

தொட்டுத் தடவி வளர்த்து

சொந்த வயிற்றுக்கு

பாணும் சம்பலும் தந்து..

புகையிலைக்கு

பெருத்த செலவில்

எருவும் உரமும்

நேரம் காலம் பார்த்துப் போட்டு

தீனியாக்கி..

வாடகைக்கு மிசின் பிடிச்சு

பாத்தி கட்டி

வாய்க்கால் வழி

தண்ணீர் பாய்ச்சி..

ஊற்றெடுக்கும் அந்தக் கிணறும்

பசியெடுத்த தாய் முலை போல

வற்றிப் போக

தண்ணீர் உறிஞ்சி எடுத்து..

புகையிலை செழிக்க

நிலம் சீரழிய..

நாசினிகள் நாசியை அரித்தாலும்

புகையிலையை

பூச்சிகள் அரிக்காமல்

சிறப்பான போயிலை

நான் செய்வேன்.

 

சீரான அந்தப்

போயிலைப் பாடங்களை

தோட்டத்தின் ஓரமதில்

கொட்டிலில் அடிக்கி வைச்சு

ஊரார் களவிலின்றும்

அரிக்கன் லாம்பின்

மண்ணெண்ணைப் புகை வாங்கி

கண்முழிச்சு காத்து வைச்சு

பதம் பார்த்து…

சாவகச்சேரி போய்

வாங்கி வந்த பொச்சுமட்டையில்

வாற வழியில்

கைதடியில் கட்டிக் கொண்ட

ஊமல் கொட்டையில்

போறணையில் அதை

வேக வைச்சு

தானும் வெந்து

சிற்பமாக்கி..

புங்குடுதீவு முதலாளியிடம்

குதர்க்கம் பேசி

சரிப்பட்டு வரா விலை நடுவே

திருநெல்வேலி முதலாளிக்கு

வித்து விட்டால்

புகையிலையும்

சிறப்பாய் சிற்பமாய்

கொழும்புக்குப் போகும்.

சிங்களச் சீமான்களும்

நல்ல விலைக்கு வாங்கி

அதை சுகித்திட

எனக்கோ காசு கொட்டும்

நான் அதில்..

வைத்த நகையெல்லாம்

நயமாய் எடுத்து வந்து..

வீட்டுக்கு

நல்ல வர்ணமும் அடிச்சு

வரப்போகும்

பேத்தியின் சாமத்தியச் சடங்கிற்கு

நகை நட்டென்று

நல்ல சாறியும் வாங்கி

ஊரார் அழைத்து

தற்பெருமையோடு

விழா வைப்பேன்..!

 

கற்பனையின் சிறகடிப்பில்

களித்திருந்த ஆச்சியின்

காதில் ஓர் செய்தி..!

திருநெல்வேலியில்

பொடியள் அடியாம்

கவுண்டு போச்சுதாம் றக்.

13 ஆமி செத்துப் போச்சுதாம்.

இருந்தாலும்

ஆச்சிக்கோ அதில் லயிப்பில்லை

தொடர்ந்தாள் தன் கனவு..!

இந்த நிலையில்..

ஆறுமுகமும் வந்து சேர

நகைகள் காட்டி

பேரம் பேச…

அவன் அதனை உரசி வாங்கி

காசை நீட்ட

5 சத வட்டி என்று

கணக்குப் போட்டு

ஒரு ரசீதும் கொடுத்தான்.

ஆச்சியும் அவை வாங்கி

பங்குவமாய்

மடியில் கட்டி

வசு வேறி வீடு போனால்..

வரும் செய்திகளோ

மாரடைப்பை தருவதாய் இருந்தன.

 

செய்திகளின் தாக்கத்தில்

மூலையில் முடங்கியவள்

அடகு கடையில்

கண்ட கனவுகள்

நொருங்கி வீழ்ந்த

அதிர்ச்சியோடு

சிங்களச் சீமையாம்

கொழும்பில்

புகையிலைக் கடையில்

மாரடிக்கும் மகனின்

நினைவில் மூழ்கினால்..!

 

தமிழனின் கருவாட்டில்

புரதம் எடுத்தவன்

தமிழனின் வெங்காயத்தில்

வீரியம் எடுத்தவன்

தமிழனின் புகையிலையில்

போதை எடுத்தவன்

தமிழனையே வெட்டிச் சாய்த்து

ரயர்களில் வேக வைத்து

அவனையே புகையிலையாக்கி

கொலைப் பாதம் செய்கிறானே..

அடேய் சண்டாளச்

சிங்களவனே..!

இயலாமையில்..

திட்டித் தீர்த்த

ஆச்சியோ

அம்மாள் ஆச்சி மேல

பழியை போட்டுவிட்டு

பதறி அடித்த களைப்பில்

அசந்தே தூங்கினாள்…!

 

கடைசியில்

அந்த மகன்

யூலைக் கலவரத்திலின்றும்

தப்பி வந்து

அப்புறமாய்

கனடா போய்

இப்ப ஆச்சியும் ஆனாளே

ரொரண்டோ வாசி..!

 

போன தடவை

2009 மே க்குப் பின்னால்

ஊருக்கு ஒரு

உலாப் போன ஆச்சி

செய்தாளே

ஓர் குறும்பு..!

இப்ப எல்லாம்

ஆச்சிக்கு..

ஊரில காணியும் இல்லை

வீடும் இல்லை…

புகையிலை உணத்த

ஒரு குடிலும் இல்லை.

எல்லாம் சிங்களவனுக்கே

கூறு போட்டு

நல்ல விலைக்கு வித்தாச்சு..!

ஆச்சியின் மடியில்

கனமும் இல்லை

மனதில் ஒரு

தாயகக் கனவும் இல்லை..!

கனடா அரசின்

வரிக் காசில்

வாழ்வும் வசமாய்

ஓடிக்கிட்டு இருக்குது..!

 

இந்த நிலையில்..

83 யூலையிலே

சிங்களவன் மூட்டிய

கோரத் தீயில்

சிறைச்சாலை வெட்டிச் சாய்ப்பில்

கருகிப் போனோரை

உடல் சிதைந்து

உருக்குலைந்து போனோரை

யார் நினைப்பார்

இதயம் இழகி..??!

அதுவும் கூட

கொத்துரொட்டிக்கு

கூட்டம் கூடும் நிலையில் நிற்குது..!

Leave a comment »

உயிரை நெருப்பாகி உடலை வெடியாக்கி உதாரணமானோரே..!

bt

 

உயிரை நெருப்பாகி

உடலை வெடியாக்கி

உதாரணமானோரே..!

உயிரென மதித்த

மண்ணின்

உடனடித் தடைகள் நீங்க

உருகி வீழ்ந்த

கண்மணிகளே…

 

பதவியும் வேண்டாம்

பட்டமும் வேண்டாம்

தாரமும் வேண்டாம்

தராதரமும் வேண்டாம்

விடுதலை ஒன்றே

வேண்டும்..

கட்டளை கேட்டு

துள்ளிக் குதித்து

தேச எல்லையில்

ஆக்கிரமிப்பாளனை

ஆக்கிரமித்த வீரரே…

 

தலைவனைக்

காத்திடுங்கள்

தாய் தேசத்தை

மீட்டிடுங்கள்

நாங்கள்..

சாவிலும்

வானிருந்து நோக்குவோம்

நட்சத்திர ஒளிகளாய்

சுதந்திர தமிழீழத்தை

ஒளிர்விப்போம்

ஆசை வளர்த்துச் சென்ற

ஆருயிர்களே..

 

இன்று நாம் கண்பது

உங்கள் கனவினின்றும்

உருமாறிய

உண்மைகளையே..!

 

உங்கள்  உயிர் மூச்சிழுத்த

தோழர்கள் சிலர்

உருமாறித் தடம்மாறி

உலாவர…

உங்கள் காற்தடம்

பற்றியோர் சிலர்

காட்டிக் கொடுப்பில்

கருமமாய்

காரியமாற்ற..

உங்களைப் போற்றியே

தாம் தப்பித்த

மக்களோ

உண்மைகள் மறந்து

ஆடி மகிழ்கின்றார்

அடிமை வாழ்வில்

அவர் சுதந்திரம்

மிளிர்கிறதாம்..?!

 

இருந்தும்

தர்மம் வெல்லும்..

வேளை வரும்

நெருப்பாகி

உடலை புகையாக்கி

தேசக்காற்றில்

கலந்திட்ட தீரரே..

நீங்களே

எம்  நீரை

நிலத்தை வானை..

ஆக்கிரமித்திட்ட

எதிரி மூச்சிலும்

கலந்து நிற்கிறீர்..!

 

வாழ்வு வரும்

உங்கள் கனவும்

நனவாகும்

காலம்  வரும்..!

தர்மம்  காக்கும்

உங்கள்

வீழாத நினைவது

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்

என்றே

சத்தியம் செய்யும்..!

 

Leave a comment »