ஆண்டுகள் ஏழு கடந்தும்..
சுவடுகளாய்
கட்டிய சேலைகளும்
காவிய பொம்மைகளும்
சீன அமிலத்தில் கரைந்து போன
எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..!
இலட்சியம் சுமந்த மறவர் பின்
விடுதலைக் கனவோடு
பாதம் பதித்த நம்பிக்கைகள்…
எதிரியின்
உயிர்ப்பிச்சைக்காய்
ஏங்கியே ஒதுங்கிய
அந்த மணற்றரையில்
உப்பில் கலந்து
உடல் கரைவார் என்று
யார் நினைத்தார்..!
கந்தகக் குண்டுகளோடு
பொஸ்பரஸ் அதுஇதென்று
ஆவர்த்தன அட்டவணையில்
அடங்கியவை எல்லாம் கொட்டி
உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி
ஓர் இனத்தின் தலைவிதியை
தலையறுத்து
சன்னங்களால் சன்னதம் ஆடிய
பூமி அது..!
இலைகள் உதிரலாம்
கிளைகள் முறியலாம்
தண்டுகள் சாயலாம்
ஏன் …
வேர்கள் அறுபடலாம்
ஆனால்
வித்துக்கள்
முளைக்கும்..!!
முள்ளிவாய்க்கால்
மண்ணில்
பாவச் சுவடுகளாய்
பாத்தியிடப் பட்டவை
பாவிகள் உடல்கள் அல்ல..
பாரினில்
ஓர் மனித இனத்தின்
சுதந்திரக் கனவுக்கான
உறங்குநிலை வித்துக்களாம்..!
மீண்டும் அவை
முளைக்கும்
வடிவங்கள் வேறாயினும்
வாழ்வுரிமை வேள்வியில்
அவை தீராது எழும்
மணற்றரையில் கூடியுள்ள
ஒவ்வாமைகள் வென்று…!
ஒற்றுமையே அதற்கு
நீர் வார்க்கும்
நெஞ்சில் நிலைக்கும்
நினைவே அதற்கு
ஊட்டமாகும்..!
சந்ததிகள்
தாண்டியும்
அது சாத்தியமாகும்..!
அதுவரை
ஓயாமல் ஒலிக்கட்டும்
நீதிக்கான நீண்ட குரல்
இவ் வையகம் எங்கும்..!!
ஆக்கம் நெடுக்ஸ் (13.05.2016)