கல்லறைக் கவிதைகள்..!

kaarthikaipoo

வேலிப் பொந்தினில்

பிறந்த நேசத்தில்

கருக்கொண்டவள்

வைக்கறைப் பொழுதினில்

வைத்தியசாலையில் நன்கே பிறந்தவள்.

 

அழகு பெயரும் சூட்டி

அடுக்குச் சட்டை போட்டு

கொண்டாடிய பிறந்த நாட்கள் பல

களிப்புறக் கண்டவள்..!

 

தங்கத் தட்டினில்

பல்லுக் கொழுக்கட்டை

அவிச்சுக் கொட்ட இன்புற்றவள்..

மங்கையாய் பருவமடைந்த வேளையதில்

பல்லக்கில்

பவனி வந்தவள்..!

 

அந்நிய நாடுகளில்

அதிசய வாழ்க்கை தந்திட

கண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில்

அழகு கன்னியாக

வீதி வலம் வந்தவள்..!

 

தேசத் தாயவள்

அவதி கண்டவள்..

நொடிப் பொழுதினில்

உந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில்

வேங்கையாகி பாய்ந்து நின்றவள்.

 

தாய் நிலம் தின்ற

சிங்களப் பாசறை நொருக்கி

வீழ்ந்தவள்..

மாவீரர் வரிசையில்

நிமிர்ந்து நின்றவள்.

 

அவளாய் இருக்குமோ

இவன் வாழ்க்கைத் துணை…

தனித்து விட்டவன்

தாய் நிலம் இழந்தவன்…

சிங்களத் தடுப்பகத்தில்

ஏக்கங்களே வாழ்வாகிப் போனவன்..

காதலியோ அவள்…!!

 

கல்லறைகள் தொலைத்தவன்

கார்த்திகை அன்று

அவள் நினைவுச் சிலைக்கு

காந்தள் மலர் சூடக் கூட

கதியற்றவனாய்

கண்ணீர் பூக்களால்

பூஜித்து நிற்கிறான் இவன்

அவள் தேசக் காதலனாய்..!!

1 Response so far »


Comment RSS · TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக