வடக்கால உள்ள காணியை
அடகுக்கு விட்டு
ஊர் சாகட்டும்
நீ பத்திரமா..
வடக்கை விட்டு ஓடு என்று
ஆத்தா விரட்டி அடிக்க..
ஓடி வந்து..
சிங்களக் குகையினில்
சிங்கிள் றூமில..
பதுங்கிக் கிடந்து..
எனக்கு முதலாவே
செல்லடிக்க முதலே
83 யூலையோட..
வசதியா தாம் வாழ என்று
இருந்த இரண்டு மாடி வீட்டை
வித்துப் போட்டு..
மேற்கால ஓடி வந்த குடும்பத்தில
வந்த ஒருத்தனை
செற்றப் பண்ணி..
நானும்
மங்கை என்று வந்து
செற்றிலாகி
இப்ப நாலு குழந்தை
பெத்து
அதுகளும் குழந்தை
பெறும் நிலைக்கு
வந்திட்டுதுகள்..!
ஒரு நாள்
தற்செயலா..
கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க..
தலைமுடி ஓரமா
டை பூசாமல் விட்டதால
தெரிஞ்ச அந்த
நரைக்கும் வெள்ளை முடிகள்…
ஊரில..
வெத்திலைப் பெட்டியோட
கவனிப்பாரற்று..
திண்ணையில் கிடந்த
பாட்டியை நினைவு கூற..
ஆகா..
எனக்கும்..
சாவு நெருங்கிட்டுது..
இப்ப மாடிப்படி ஏறினாலும்
மூச்சு வாங்குது..
என்ற நிலையில..
சமூகக் கடமை
உணர்ச்சியாக் கிளம்புது.
என்னே அதிசயம்..
வன்னியில..
முள்ளிவாய்க்காலின் பின்னால..
என் சொந்தங்கள் தப்பி வந்து
துன்பப்படுவது கண்ணுக்கு
தெரியுது.
நேற்று வரை
கரும்புலி என்றும்
கடற்புலி என்றும்
வான் புலி என்றும்
தரைப் புலி என்றும்
குப்பி அடிச்சும்
குண்டு வெடிச்சும்..
அதுகள் செத்த போது…
வீரவணக்கம் என்று
கவிதை கூட எழுதினதல்ல..
அவ்வளவு பிசி நான்.
ஏன்..
நான் பெத்த செல்வங்களின்ர
ஆண்டு தவறாத..
பேர்த்டே பாட்டிகளில..
ஊராக்கள் ஊர் விடுப்புக் கேட்க..
ஐ டோண்ட் நோ..என்று
சிலிம்பிக் கொண்டு போயிருக்கிறன்.
இப்ப எல்லாம்..
நான் பெற்ற பிள்ளைகள்
ஆளுக்கொன்றைப் பிடிச்சுக் கொண்டு..
என்னை விட்டு போற நிலை
நெருங்கிட்டதால..
தனிமை வாட்ட..
ஊர்ப் பிள்ளைகளின் தனிமை
எனக்குப் புரியுது.
யோசிச்சுப் பார்த்தன்..
உங்கினை லண்டன்.. கனடான்னு..
அடிமாட்டுக்கு எவனாவது
இளிச்ச வாயன் கிடைச்சா
உந்த வன்னிப் பிள்ளைகளுக்கு
கட்டிக் கொடுப்பம்..
ஊர்ப் புகழோட
செய்ய மறந்ததிற்கு
புண்ணியமும் சேருமாமெல்லோ..!
ஆனால் என்ர பிள்ளைக்கு..
ஐயகோ..
அவன் காலில
“சூ” இல்லாட்டியே
என் மனசு..
தாங்காது.
கார் இல்லாமல்
நாலடி தூரம் நடந்தாலே
மனசு பதபதைக்குது.
அவனுக்கு அவளுக்கு
இங்கினை பிறந்ததுகள் தான் சரி.
அதை விட்டிட்டு..
“சூ| போடாமலே
ஓடி ஓடி..
சூனியப் பிரதேசங்கள் தாண்டி
எதிரி முகாம்கள் பிடிச்சதுகளை
கட்டி வைக்க முடியுமோ..???!
மேலும் சொன்னா..
ஊராருக்குத் தானே
எனக்கா..
நான் தானே இங்க
சிற்றிசன் ஆகிட்டனே..
இங்க
ஒரு இளிச்சவாயனும்
கையில சிக்கல்லைன்னா..
உந்த ஊரெல்லாம்
வாங்கிக் கொடுக்குது..
தையல் மிசின்
நானும் நாலு மிசின்
வாங்கிக் கொடுத்திட்டா
போற வழிக்குப்
புண்ணியமாப் போகும்.
நரை விழுந்த வயசில..
கலியாணம் அவளவைக்கு
கட்டி வைக்கிறது
என்ன சுலபமே..
அவளவைக்கு
தையல் மிசின் தான் சரி.
தையல் மிசின் நாயகிகள்..
ம்ம்.. இது தான் தமிழீழம் மீட்க
இரும்பு தூக்கின ஆக்களுக்கு
சரியான “ரைற்றில்”..
வெளில ஒரு வார்த்தை வராமல்..
மனசுக்க சொல்லிக் கொண்டன்.
ஆ.. மறக்கக் கூடாது..
தையல் மிசின் கொடுக்கிறதை
போட்டோ எடுத்துப் போடனும்..
அப்ப தான்
பின்னாடி கேட்டா
முன்னாடி ஆதாரமா வைக்க முடியும்.
பங்சனுகளில…
ஓசிப் பேப்பர்களில…
பேஸ் புக்கில போட்டு..
நானும்
ஊருக்கு செய்தனென்று
தம்பட்டம் அடிக்க முடியும்..!
உந்த தையல் மிசின் கதையை
ஊர் உளவாரம்
சிதம்பரம் அண்ணையிண்ட
காதிலையும் போட்டு வைச்சிடனும்…
அப்பதான் அவரும்
நாலு கதை
தையல் மிசின் நாயகிகள் என்று
தலைப்புப் போட்டு எழுதித் தள்ள
நானும் என் சேவையும்
புகழின் உச்சி தொட்டிடும்.
அப்புறம் என்ன…
நான் இங்கினை கவுன்சிலர்
தேர்தலில
நிற்கலாம்..!
என்ர பிள்ளைகளுக்கும்
பெருமை வந்து
ஓசியில சேரும்..!
எல்லாம் அந்த
தையல் மிசின் நாயகிகளின்
அனுக்கிரகமே.
வாழ்க அவளவை.. வளர்க்க என் புகழ்..!
(இது தான் எமக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் தொடர்பில் நம்மவர்களில் பலரின் நிலை..! கவலைக்குரியது..!)







