வானுயரப் போக
வாய் பிளந்து
குதிக்க…
வெடிக்கும் அந்தக் கந்தகத் துகள்கள்
காற்றில் கலக்க..
மாசும் அங்கு
தொன் கணக்கில் ஏற..
சுவாசக் காற்றும்
உள்ளிளுக்கும்
நச்சுப் புகையை..
மகிழ்வுற வாங்கி..
நாங்களோ..
பட்டாசு வெடித்து
பண்டிகை செய்வோம்.
சொந்த இனத்தவன்
சாவில்
மாற்றான் காட்டிய வேதக் கணக்கில்
சுய புத்தியற்று
குதூகலித்தபடியே..!
இந்த இடைவெளியில்
பொருளீட்டும்
முதலைகள் வாயில்..
“வண்டி” வலிக்க
உண்டிக்கு ஏங்கி
இருக்கும்
மழலைகள் கூட
மனித இரைகளாக..!
வெடிக்கும் அந்தப் பட்டாசு
ஓசைக்குள்..
விடுதலைக்காய்
வாழ்வுக்காய்
கதறும் இந்த
குரல்கள்
கேட்காது..
நாளை
நமக்கும் இதுபோல்
ஓர் நிலை வந்தால்..
நாலு பேரில் ஒருவராய்
நாமும்..
கேட்பாரற்ற அடிமைகளாய்..!
இதுதான் மனித வாழ்வா
சமத்துவமும்
மனித உரிமைகளும்…
ஏகாதபத்தியத்தின்
பிழைப்புக்கு முதலீடு..
பலம் படைத்தவனின் வாழ்வுக்கு
உயிர் நாடி..
அவனே
ஆக்கிவிட்ட ஏழைகளாய்
மனிதர்களில் பெரும் பகுதி..
இயற்கை தந்த வீட்டில் கூட
வாழ அனுமதியில்லை..!
சிங்களம்
பரிசளித்த
பாதுகாப்பு வலயங்கள் போல…!
ஓட்டுப் போட
பதவிக்கு வந்த கொலைகாரன் கூட
ஜனநாயகவாதி..
ஓட்டுப் போட்டு
ஓடு கொண்டு அலைபவன்..
கோழை.. ஏழை… அடிமை..!
பண்டிக்கை கூட
அவன் வீட்டில் பகிஸ்கரிக்கும்
கொடுமை..!
என்று மாறுமோ..
இந்த வேற்றுமைகள்..???!
மனித மனங்கள்
சமமாகும் கணமே…!
அன்றே அதுவே
தீபாவளி..!
அதுவரை
தீபாவளி
என்ற ஒன்றே இல்லை..!







