தையல் மிசின் நாயகிகள்..!

வடக்கால உள்ள காணியை
அடகுக்கு விட்டு
ஊர் சாகட்டும்
நீ பத்திரமா..
வடக்கை விட்டு ஓடு என்று
ஆத்தா விரட்டி அடிக்க..
ஓடி வந்து..
சிங்களக் குகையினில்
சிங்கிள் றூமில..
பதுங்கிக் கிடந்து..

எனக்கு முதலாவே
செல்லடிக்க முதலே
83 யூலையோட..
வசதியா தாம் வாழ என்று
இருந்த இரண்டு மாடி வீட்டை
வித்துப் போட்டு..
மேற்கால ஓடி வந்த குடும்பத்தில
வந்த ஒருத்தனை
செற்றப் பண்ணி..
நானும்
மங்கை என்று வந்து
செற்றிலாகி
இப்ப நாலு குழந்தை
பெத்து
அதுகளும் குழந்தை
பெறும் நிலைக்கு
வந்திட்டுதுகள்..!

ஒரு நாள்
தற்செயலா..
கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க..
தலைமுடி ஓரமா
டை பூசாமல் விட்டதால
தெரிஞ்ச அந்த
நரைக்கும் வெள்ளை முடிகள்…
ஊரில..
வெத்திலைப் பெட்டியோட
கவனிப்பாரற்று..
திண்ணையில் கிடந்த
பாட்டியை நினைவு கூற..
ஆகா..
எனக்கும்..
சாவு நெருங்கிட்டுது..
இப்ப மாடிப்படி ஏறினாலும்
மூச்சு வாங்குது..
என்ற நிலையில..
சமூகக் கடமை
உணர்ச்சியாக் கிளம்புது.
என்னே அதிசயம்..
வன்னியில..
முள்ளிவாய்க்காலின் பின்னால..
என் சொந்தங்கள் தப்பி வந்து
துன்பப்படுவது கண்ணுக்கு
தெரியுது.

நேற்று வரை
கரும்புலி என்றும்
கடற்புலி என்றும்
வான் புலி என்றும்
தரைப் புலி என்றும்
குப்பி அடிச்சும்
குண்டு வெடிச்சும்..
அதுகள் செத்த போது…
வீரவணக்கம் என்று
கவிதை கூட எழுதினதல்ல..
அவ்வளவு பிசி நான்.

ஏன்..
நான் பெத்த செல்வங்களின்ர
ஆண்டு தவறாத..
பேர்த்டே பாட்டிகளில..
ஊராக்கள் ஊர் விடுப்புக் கேட்க..
ஐ டோண்ட் நோ..என்று
சிலிம்பிக் கொண்டு போயிருக்கிறன்.
இப்ப எல்லாம்..
நான் பெற்ற பிள்ளைகள்
ஆளுக்கொன்றைப் பிடிச்சுக் கொண்டு..
என்னை விட்டு போற நிலை
நெருங்கிட்டதால..
தனிமை வாட்ட..
ஊர்ப் பிள்ளைகளின் தனிமை
எனக்குப் புரியுது.

யோசிச்சுப் பார்த்தன்..
உங்கினை லண்டன்.. கனடான்னு..
அடிமாட்டுக்கு எவனாவது
இளிச்ச வாயன் கிடைச்சா
உந்த வன்னிப் பிள்ளைகளுக்கு
கட்டிக் கொடுப்பம்..
ஊர்ப் புகழோட
செய்ய மறந்ததிற்கு
புண்ணியமும் சேருமாமெல்லோ..!

ஆனால் என்ர பிள்ளைக்கு..
ஐயகோ..
அவன் காலில
“சூ” இல்லாட்டியே
என் மனசு..
தாங்காது.
கார் இல்லாமல்
நாலடி தூரம் நடந்தாலே
மனசு பதபதைக்குது.
அவனுக்கு அவளுக்கு
இங்கினை பிறந்ததுகள் தான் சரி.
அதை விட்டிட்டு..
“சூ| போடாமலே
ஓடி ஓடி..
சூனியப் பிரதேசங்கள் தாண்டி
எதிரி முகாம்கள் பிடிச்சதுகளை
கட்டி வைக்க முடியுமோ..???!

மேலும் சொன்னா..
ஊராருக்குத் தானே
எனக்கா..
நான் தானே இங்க
சிற்றிசன் ஆகிட்டனே..
இங்க
ஒரு இளிச்சவாயனும்
கையில சிக்கல்லைன்னா..
உந்த ஊரெல்லாம்
வாங்கிக் கொடுக்குது..
தையல் மிசின்
நானும் நாலு மிசின்
வாங்கிக் கொடுத்திட்டா
போற வழிக்குப்
புண்ணியமாப் போகும்.

நரை விழுந்த வயசில..
கலியாணம் அவளவைக்கு
கட்டி வைக்கிறது
என்ன சுலபமே..
அவளவைக்கு
தையல் மிசின் தான் சரி.
தையல் மிசின் நாயகிகள்..
ம்ம்.. இது தான் தமிழீழம் மீட்க
இரும்பு தூக்கின ஆக்களுக்கு
சரியான “ரைற்றில்”..
வெளில ஒரு வார்த்தை வராமல்..
மனசுக்க சொல்லிக் கொண்டன்.

ஆ.. மறக்கக் கூடாது..
தையல் மிசின் கொடுக்கிறதை
போட்டோ எடுத்துப் போடனும்..
அப்ப தான்
பின்னாடி கேட்டா
முன்னாடி ஆதாரமா வைக்க முடியும்.
பங்சனுகளில…
ஓசிப் பேப்பர்களில…
பேஸ் புக்கில போட்டு..
நானும்
ஊருக்கு செய்தனென்று
தம்பட்டம் அடிக்க முடியும்..!

உந்த தையல் மிசின் கதையை
ஊர் உளவாரம்
சிதம்பரம் அண்ணையிண்ட
காதிலையும் போட்டு வைச்சிடனும்…
அப்பதான் அவரும்
நாலு கதை
தையல் மிசின் நாயகிகள் என்று
தலைப்புப் போட்டு எழுதித் தள்ள
நானும் என் சேவையும்
புகழின் உச்சி தொட்டிடும்.

அப்புறம் என்ன…
நான் இங்கினை கவுன்சிலர்
தேர்தலில
நிற்கலாம்..!
என்ர பிள்ளைகளுக்கும்
பெருமை வந்து
ஓசியில சேரும்..!

எல்லாம் அந்த
தையல் மிசின் நாயகிகளின்
அனுக்கிரகமே.
வாழ்க அவளவை.. வளர்க்க என் புகழ்..!

(இது தான் எமக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் தொடர்பில் நம்மவர்களில் பலரின் நிலை..! கவலைக்குரியது..!)

மறுமொழி அளிக்கவும் »

பூரிக்கும் புன்னகை என்ன விலை..??!

வானுயரப் போக
வாய் பிளந்து
குதிக்க…
வெடிக்கும் அந்தக் கந்தகத் துகள்கள்
காற்றில் கலக்க..
மாசும் அங்கு
தொன் கணக்கில் ஏற..
சுவாசக் காற்றும்
உள்ளிளுக்கும்
நச்சுப் புகையை..
மகிழ்வுற வாங்கி..
நாங்களோ..
பட்டாசு வெடித்து
பண்டிகை செய்வோம்.
சொந்த இனத்தவன்
சாவில்
மாற்றான் காட்டிய வேதக் கணக்கில்
சுய புத்தியற்று
குதூகலித்தபடியே..!

இந்த இடைவெளியில்
பொருளீட்டும்
முதலைகள் வாயில்..
“வண்டி” வலிக்க
உண்டிக்கு ஏங்கி
இருக்கும்
மழலைகள் கூட
மனித இரைகளாக..!

வெடிக்கும் அந்தப் பட்டாசு
ஓசைக்குள்..
விடுதலைக்காய்
வாழ்வுக்காய்
கதறும் இந்த
குரல்கள்
கேட்காது..
நாளை
நமக்கும் இதுபோல்
ஓர் நிலை வந்தால்..
நாலு பேரில் ஒருவராய்
நாமும்..
கேட்பாரற்ற அடிமைகளாய்..!

இதுதான் மனித வாழ்வா
சமத்துவமும்
மனித உரிமைகளும்…
ஏகாதபத்தியத்தின்
பிழைப்புக்கு முதலீடு..
பலம் படைத்தவனின் வாழ்வுக்கு
உயிர் நாடி..
அவனே
ஆக்கிவிட்ட ஏழைகளாய்
மனிதர்களில் பெரும் பகுதி..
இயற்கை தந்த வீட்டில் கூட
வாழ அனுமதியில்லை..!
சிங்களம்
பரிசளித்த
பாதுகாப்பு வலயங்கள் போல…!

ஓட்டுப் போட
பதவிக்கு வந்த கொலைகாரன் கூட
ஜனநாயகவாதி..
ஓட்டுப் போட்டு
ஓடு கொண்டு அலைபவன்..
கோழை.. ஏழை… அடிமை..!
பண்டிக்கை கூட
அவன் வீட்டில் பகிஸ்கரிக்கும்
கொடுமை..!

என்று மாறுமோ..
இந்த வேற்றுமைகள்..???!
மனித மனங்கள்
சமமாகும் கணமே…!
அன்றே அதுவே
தீபாவளி..!
அதுவரை
தீபாவளி
என்ற ஒன்றே இல்லை..!

மறுமொழி அளிக்கவும் »

கிறீஸ் பூதம் – பயோடேட்டா

சிங்களவன்
உயிரணுவில் உதித்து..
சிங்களத்தி
கருவறையில் வளர்ந்து
அவள் முலை பிடித்து
உணவருந்தி
சிங்கள தேசத்தில் உருவானவன்..!

ராஜபக்ச
வம்ச வழியில்..
கோத்த பாய எனும்
ராஜ கொலைஞனின்
கொலைக் களத்தில்
கோரம் செய்ய கற்றுக் கொண்டவன்.

தமிழ் பெண்கள்
கற்பு எடுப்பு – பின்
அவள் முலை அறுப்பு
கோத்தாவின் கட்டளை…!
பிசகாமல் அதை செய்து முடிப்பதே
என் பிறவிக் கடன்.

முள்ளிவாய்க்கால்
என் பயிற்சிக்களம்..
நந்திக்கடலில்
எனக்கு பட்டமளிப்பு..
தமிழர் தலை கொய்து – அதில்
பட்டம் பெற்றவன்.

பயங்கரவாதப்
போர் முழக்கம்…
கழுகுகள்.. மயில்கள்..
றகன்கள்.. பீனிக்ஸ்கள்..
எல்லாம் கைகோர்க்க..
சிங்கத்தின் கையால்
புலி அழிப்பு
அதுவே என் முதற் களம்.
போரும் ஓய்ந்தது
வன்னிக் காட்டில்..!

வேலைவெட்டி இன்றி
இப்போ நான்…!
சிங்கள இனத்தின்
பேரினப் பெருமையும்…
கோத்தாவின் கல்வியும்
முள்ளிவாய்க்கால் பயிற்சியும்
நந்திக்கடல் பட்டமும்
இருந்தும் என்ன பயன்…?!

வீணாக விடுவனோ
பயின்ற கலைகளை..!
போடுகிறேன்
ராஜ விசுவாச..
கிறீஸ் பூத வேடம்..
தொழில் தொடங்கி விட்டேன்..
தமிழ் முலைகளொடு
நபி மகள் முலையும்
தடவியே அறுப்பேன் என்று.

சிங்கள முலையில்
பால் குடித்து…
தமிழ் முலை
அறுப்பை செய்கிறேன்..
நான் ஒரு சிங்கள இனவெறியன்
மனிதனே அல்ல
என்ற செய்தி காவி
தினமும்..
புத்தம் சரணம் பாடுகிறேன்.

என்னிடம் போய்
மனித உரிமை பற்றிப் பேச்செதற்கு..
சிங்கள இனமே
மனித இனமல்ல….
மனித சிந்தனையற்ற
பேரினப் பூத இனம்..!
புரிந்து கொள்ளச்
சொல்கிறேன்
உலகை இன்று..!

உலக மகா
தேசங்களே
பாரத மாதாக்களே..
மா சேதுங்கின் சீடர்களே..
ஹிட்லரின் வாரிசுகளே..
உங்களுக்கும்
என் பணி
வேண்டின்
தொடர்பு கொள்க…!
மனித இனம்
கருவறும் நிலை
வந்தாலும்..
ஓயேன் என் பணி
விலக்கேன் – என்
சிங்களப் பேரின
விசுவாசம்..!

மறுமொழி அளிக்கவும் »

யாழ்ப்பாணம்.

 

வரிப் புலிகள்
வாழ்ந்த காலம்..
விறகு வெட்டி
கட்டி
கண்டி வீதி வழி
நடுச்சாமம் தாண்டியும்
பெண்டிர் கூட
மிதித்து வைக்க
ஓடிய வண்டிகள்..
யாழ் நகர் வந்து சேர
செம்மணிப் பேய்கள் கூட
அமைதி காத்தன…!

வானரப் படைகள்
வாழும் காலம்..
விறகுவெட்டியும்
தூக்கில் தொங்குகிறான்
மாற்றான் மனையாளொடு
கட்டியணைத்தபடி.
பெண்டிர்
மிதிக்கா வண்டிகள்
பெற்றோலில் ஓட
பெற்றோர் ஓடுகிறார் அவர் பின்
பிள்ளை ஓடிப் போயிடுவாளோ
என்றே பதறியடித்தபடி.
செம்மணிப் பேய்களை
விஞ்சி..
கோத்தாவின்
ஏவல் பிசாசுகள்..
கிறீஸ் பூதங்களாய்
மகளிரை மட்டும்
குறிவைத்து
கருவறுக்கும் நிலை..!
தமிழினம்
ஈழத்தில்
வேரறும் நிலை…!
புட்டுக்கு
தேங்காய்ப் பூவாய்
இருந்த சமூகம் கூட
களமிறங்கும் நேரம்.

பெற்ற
தாய் நாட்டை விட்டு
பொருள் ஈட்ட..
அகதி என்ற அந்தஸ்தில்
மாற்றிடம் புகுந்துவிட்ட
சந்ததிக்கோ….
இச் சங்கதிகள்
வெறும் செய்திகளாக..!
ஒரு செவி புக
மறு செவி விடு
கதைகளாய் அவர்க்கு..!

வீதிகள் தோறும்..
சீறும் புலிக்கொடி தூக்கி..
செவிப்பறை வெடிக்க..
போட்ட கூச்சல்கள்..
வெற்று வேட்டுக்களாமோ..???!
வரிப் புலியும்
கூடேகி
சிக்கி விட்ட பின்..
எலிகளுக்கும்
பேய்களுக்கும்
பூதங்களுக்குமே கொண்டாட்டம்,
அவை
என்றும்..
சிங்களப் பேரினத்தின்
தத்துக்களே..!
எனி
கடவுள் தான் காக்க
வேண்டும்
எம் தமிழினத்தை….
மீள்கிறது
தந்தை செல்வாவின் காலம்..!

இருந்தும்..
இன்னும்
ஏமாறும்
மனிதர்களாய்..
மறப்போம் மன்னிப்போம்
மகான்களாய்
நாம்…
“தனிப் பெருமை” காக்கிறோம்.
யாழ் வைத்தியசாலைப் படுகொலைகளும்
செம்மணிப் புதைகுழிகளும்
முள்ளிவாய்க்கால் பேரவலமும்..
ஊர்க்கதை பேசும்
எமக்கு
திண்ணைகள் தோறும்
குந்திவிட்டு எழும்ப
தட்டி விடும்
தூசிகளாமே..!
சனல் 4 லும் இல்லையேல்
மகிந்த கூட
புத்த மகானாக…
மறந்து போயிருக்கும் எல்லாம்.

புலியாய் பாய்ந்த இனம்..
இன்று
பூனையிலும் கேடாய்…!
உயிர்க்குமோ..
மாண்டாரின்
மாண்மியம்..?!
திருந்துமோ
இவ்வினம்..??!
சந்ததிகள் கேட்குமோ
அல்லது
தந்திடுமோ..
கிழக்குச் சூரியனின்
உதயலில்
ஒரு தேசத்தின்
விடியற் செய்தி…??!
அதற்காய்
உழைக்குமோ
ஊர் சேர்ந்து
இல்லை….
என்றும் போல்
உறங்குமோ
இவ்வினம்
கனவினில்
கோட்டை பிடிக்க..!

மறுமொழி அளிக்கவும் »

அடையாளம் காட்டப் போறன்.

ஓல்(O/L) பரீட்சையில்
ஓல்(all) எவ்(F) வந்ததும்
தலை கிறுகிறுக்க அலைந்த போது..
இயக்கத்துக்கு ஓடிடுவானோ..
பயந்தாள் அம்மா.

ஊருக்க வைச்சிருந்தா
உவங்கள் வந்து
இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள்
உங்கால உள்ள காணியை
வைச்சிட்டு
அனுப்பிவிடு இவனை
கொழும்புக்கு..
புத்தி சொன்னார் அப்பா.

கொழும்பில
போய் பொடி கெட்டிடும்
உந்த ஊரெல்லாம் போகுது கனடா
அனுப்பிவிடு அங்க..
பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..!

நானும்
சோதனையில் பெயிலான (fail ஆன)
சோகம் தீர
புறப்பட்டேன்
தாண்டிக்குளம் தாண்டி
ரொராண்டோ.

வருசம் ஒரு 5 போய் இருக்கும்
நாலு காசு
நாய்படா பாடுபட்டு
வெள்ளைத் தோலிடம்
ஏச்சும் இழிவும் வாங்கி
உழைச்சது தான்..!
அம்மா கேட்டாள்
பொம்பிளை ஒன்று அனுப்பி வைக்கட்டே..??!

இளமைத் துடிப்பும்
சோடியாய் அலையும்
ரொராண்டோ வீதிகளும்
எனக்குள்ளும் மோகத்தைக் கிளறி விட
அம்மாவின் கேள்வியில்
நியாயத்தை தேடி..
ஓம் என்றேன்..!

கலியாணம் முடிக்க..
சிறீலங்கா போக ஏலாதாம்
ஏனென்றால் நான் அகதியாம்..
அட கடவுளே
செல் (shell) வந்து அறியா
ஊரை விட்டு ஒரு நாளும் ஓடினதில்ல..
ஓல் லில பெயிலானதுக்கு
அம்மாக்குப் பயந்து
கோவிலில போய் ஒளிச்சிருந்ததை தவிர..
எனக்கும் அகதிப் பட்டம்.

பொம்பிளைக்கு ஆசைப்பட்ட மனசு
சிங்கப்பூர் போயாவது
கொண்டு வரத் துடித்தது
அந்த ஊர் மறி ஆட்டை..!
கனடா குளிருக்க
இருந்த பசிக்கு
வேட்டைக்கு அது அவசியம்..
என்று கண்டதால
றிஸ்க்(risk) எடுப்பது
றஸ்கு சாப்பிடுவது போலாச்சு எனக்கு.

எல்லாம் நல்ல படியா முடிஞ்சு
அவளும் வந்து சேர்ந்தாள்.
மாதம் ஒரு 10 போய் இருக்கும்
யூனியரும் தவழ்ந்தது என் மடியில்.
அதுக்குள்ள
ஊரில பிரச்சனை என்று
அம்மாவும் அப்பாவும் கூட தங்கையும்
ஓடி வந்துவிட்டனர் கொழும்புக்கு.
ஊரே காலி.

நானும் ஓர் நாள்
தற்செயலாக செய்தி கேட்க..
முள்ளிவாய்க்காலாம் எண்டாங்கள்..!
என்ர பொடியும்
வெளியுலகம் பார்த்தது இல்ல..
நானும் புலி வால் பிடிச்சு அறிஞ்சதில்ல..
புறப்பட்டோம்.. போராட என்று
தமிழீழம் கேட்டு..
கட்டினோம் புலிக்கொடி.. காரெல்லாம்.
போதாக்குறைக்கு
பொடிக்கும் மூஞ்சியெல்லாம் புலி வேசம் வரைஞ்சு..
போட்டோம் கூச்சல்…
விடுப்போடு பொழுது போக்க
புலி ஆதரவும் காட்டி நிற்க..!
நாலு சனம் பார்த்துப் பேச..!

இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு
அமைதி வந்திட்டு
அவங்கள் எல்லாம் செத்துட்டாங்கள்
போற வாற வழியில
வரியும் இல்ல புலியும் இல்ல..
ஆமிக்காரங்கள் இங்கிலீசில கதைச்சு
எங்கட பிள்ளைகளை கொஞ்சி மகிழுறாங்கள்
நீயும் கொண்டு போய் காட்டன்….
என்றார்
சுப்பர் மார்க்கட்டில் என்னோட
கூட மாரடிக்கும் மாதகல் மதன்.
போன மாதம் தான்
ஊருக்கு போய் வந்தவராம்.

மதனின் கதை கேட்டதில
எனக்கும் ஊருக்கு போற ஆசை முளைக்க
சும்மா கிடக்கேலாம
கடைசி நேரத்தில புலிக்கொடி புடிச்சது
பயமும் வந்து தொலைய..
தயங்கிப் போட்டு
என்ன ஊருக்குப் போவமே
உமக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்..
மனிசி என்று வந்து
வீட்டுக்கையே இருந்து
எனக்காய் உழைக்கும் அவளையும்
சும்மா கருத்துக் கேட்டன்.

ஓமங்க..
எங்கட பொடிக்கும் ஊர் காட்ட வேணும்
எனக்கும் அப்பா அம்மாவை பார்க்க வேணும்..
வாங்கோ போவம்.
ரிக்கட் போடுறதென்றால்
சிறீலங்கன் எயார் லைன்சில போடுங்கோ..
தமிழ் படம் போடுவாங்களாம்..
எங்கட ஊர் சாப்பாடாம்..
குணம் அன்ரி சொன்னவ..!

அப்ப சரி
நல்லூர் திருவிழாவும்
பார்க்கிற மாதிரி ரிக்கட் போடுறன்..
நீர் இப்பவே ரெடியாகும்
ஊரில உள்ளதுகளுக்கு
சும்மா வெறும் கையோட போக ஏலுமே
நாலு சாமான் வாங்கிச் சேரும்..
என்ன..!

நாலு சாமான் வாங்கிச் சேர்த்து
நாலு லக்கேஜ் கட்டி ஏத்தி
நானும் கட்டுநாயக்கா தாண்டி
ஊருக்கு போனது தான்..

ஊரெல்லாம் நல்ல கலகலப்பு..
உவங்கள் யாரோ
ஈழம் கேட்டு நாசமாக்கினதை தவிர
சனம் ஸ்கூட்டியில பறக்குதுகள்..
ஆமிகாரன் நின்று விசிலடிச்சு
எங்கட பெட்டையளுக்கு
விளையாட்டு காட்டுறான்
என்ன ஒரு பொழுதுபோக்கு
என்ன ஒரு இன ஐக்கியம்..!

கொழும்பில பார்த்த சிங்களம்
மணிக்கூட்டு கோபுரத்தில ஏறி நிற்குது..
மருதானையில பார்த்த புத்தர் சிலை..
மருதனார் மடத்திலும் இப்ப இருக்குது..
பஸ்ஸில பார்த்த ஆமத்துறு
ஆரிய குளத்தில குளிக்கிறான்..!

என்ர பொடிக்கு
உதுகள் தான் எங்கட அடையாளங்கள்
காட்டின திருப்தியோட
கல்வியங்காடு தாண்டி வரேக்க சொன்னன்..
இதுதான்
செங்குந்தா இந்துக்கல்லூரி
இங்க தான் நான் படிச்சது.
பொடியும் கேட்டான்
அதென்ன செங்குந்தா என்றால்
அது அந்த ஊரில இருந்த சாதி
அதென்னப்பா சாதி என்றால்..
காட்டுறன் வா..
அழைச்சுக் கொண்டு
யாழ்ப்பாணச் சாதியெல்லாம்
காட்டிப் போட்டு..
கடைசில..
விடை பெற்றோம்..
கனடாவுக்கு..!

லக்கேச்சுக்கு மேல..
காவுகின்றோம் கனக்க
தலை நிறைய…!
அடுத்த தலைமுறைக்கு
அடையாளமாய் காட்ட..!
அதோட அடுத்த முறைக்கு வரேக்க
கண்டிக்கும் போக வேணும்..
அதுவும் எங்கட நாடு தான்
என்றேன் பெருமையோடு
என்ர பொடிக்கு.

அது சரி
உவங்கள் உந்த சீமேந்து இல்லாத
காலத்திலும்
சக்கரையும் சுண்ணாம்பும் போட்டு கட்டினது
மாவீரர் இல்லங்கள் எண்டாங்கள்
அதுகளைக் காணவே கிடைக்கல்ல..
ஓடேக்க இடிச்சிருப்பாங்கள் போல..!

இப்ப
ஆமிக்காரன்
நல்லாத்தான் வைச்சிருக்கிறான் ஊரை..
ஓல் லில சமூகக்கல்வியில..
படிச்சதை வைச்சு
எவ் எடுத்ததில..
உதயமான அரசியல்
ஞானம்..
ஆராய்ச்சி செய்து கண்ட
உண்மை இது.

ஊரில அமைதி வந்திட்டு
சுதந்திரம் கிடைச்சிட்டு..
சரி எல்லாரும் வாங்கோ
ஒருக்காலாவது
சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஏறி
எங்கடையளுக்கு
அடையாளம் காட்ட
ஊருக்குப் போவம்
இதுவே கனடாவில
என்ர அரசியல் பிரச்சாரம் இன்று..!

மறுமொழி அளிக்கவும் »

தன் காதலை இப்படியும் உணர்த்துவாள் காதலி..!

வலையில் பெற்றது.

மறுமொழி அளிக்கவும் »

இது யார் குற்றம்…?!

மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று…!

தோப்பாகும் என் வாழ்வென்று
மனதோடு மடி வாங்கி
காலமெல்லாம் கவி பாடி
சீராட்டிய மலரின் மெளனம்
சம்மதமல்ல சாமர்த்தியம்
புரிந்து கொண்டேன்…!

குருவி நான் பார்த்திருக்க
வம்பாகி வந்த வண்டுக்காய்
ஏங்கி நீ துரத்திட்டாய்
எனைத் தூரவே….!
கனவு கலைத்து
நிஜம் காட்டினாய் நன்றி..!
ஆனால்…
உன் நினைவு மட்டும்
என்னோடு நிலைக்க
ஏங்குகிறேன் தனிமையில்….!

உன் முடிவு கண்டு…..
வைக்க எனக்குத் தாடியும் இல்ல
கையில் மதுவும் இல்ல
கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல
தொங்க ஒரு கயிறும் இல்ல
உண்ண ஒரு நஞ்சுமில்ல
இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல…!

குருவி நான் சுதந்திரச் சிட்டு
நினைவுகள் பாரமாக
சிறகுகள் விரிய மறுக்க
கூண்டோடு அடைபட்டு
பரிதவிக்கிறேன்..!
நினைவுச் சிறை உடைத்துப்
பறக்க முயல்கிறேன் முடியவில்லை…!

பார் மலரே…
எந்தன் பரிதாபம்
உன் நினைவுகள்
என் சிங்காரச் சிறகுகள்
சிறை செய்ய
மீண்டும் உன்னிடமே சிறையாகிறேன்…!
இது யார் குற்றம்…??!
என் செய்வேன்…
தவிப்பே வாழ்வாகித்
தவிக்கிறேன்
கருணை காட்டாயோ….!
தாராயோ…
நீ கொண்ட பேரன்பை
குருவி என் சொத்தாக்க…!

———————-

(யாவும் கற்பனை)
ஏப்ரல் 2005 (நன்றி யாழ் இணையம்.)

மறுமொழி அளிக்கவும் »

கவியல்ல இது ஒரு காவியம்.

கவியல்ல இது ஒரு காவியம்
தேடியும் கிடைத்திடா
தேவதையாய் எண்ணியது
தேய்ந்து கட்டெறும்பான
கதை சொல்லும் ஜீவகாவியம்…!

ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு
தோப்பிலே குருவியொன்று
சிங்காரச் சிறகு விரிக்க
சுதந்திர வானம்….!
சுதந்திரமாய்க் குடியிருக்க
சின்னக் கூடு
சுமை தாங்கியாய்
சின்ன மாமரம்…!
சுந்தரக் கானமிசைக்க
தென்றல் போடும்
தக திமி தாளம்..!
இவை சேர
தப்பாமல் தன்பாட்டில்
வாழ்ந்தது மனதோடு
மகிழ்ச்சி பொங்க….!

அன்றொரு வேளை
அந்திசாயும் மாலை நெருங்க
அருமையாய் வசந்தம் பூத்திருக்க
பூமி மகள் அழகு காட்டியிருக்க
கண்ணினைக் காட்சிகள்
காந்தமாய்க் கவர
களம் ஏகியது குருவி….!
கண்கொள்ளாக் காட்சிகள்
விருந்துகள் படைக்க
வாயோடு வந்த கீதம் இசைத்துப்
பறக்குது சிட்டு
குதூகலித்துமே…!

இங்ஙனமாய்
இயற்கையின் நாயகன்
இன்புற்றிருக்க
குறுக்கே வந்த கருவண்டு
கவனம் இழுத்துச் செல்லுது..!
அதன் வழி
செல்லச் சொல்லுது மனம்
பாவம்…விதி வழி அறியாச் சிட்டும்
கூடிப் பறக்குது கருவண்டின் பின்னே…!
காட்சிகள் சிலது கடந்ததும்
வந்தது ஒரு வாசம்
வசந்தத்தின் பரிசாய்
தந்தது ஒரு மலர்…!

பார்வைகள் பரிமாற
மலரின் மாயமறியாது
சிட்டும் மயங்கியது
வந்த பாதை மறந்து
போதையில் வீழ்ந்தது..!
பருவத்து அழகு காட்டி
நயமாய் அழைத்து
வசமாக்கிக் கொண்டது மலர்..!
சிக்காரச் சிட்டும்
சிறைபட்டுப் போனது
தூய மனசும்
பாழ்பட்டுப் போனது….!

காலங்கள் கழிந்தது
மலரின் வேசம் கலையும்
காலமும் வந்தது…
பருவத்துச் சுருதி கூட்டி
பாடாய்ப்படுத்திய மலர்
அரை நொடிப் பொழுதில்
பாரா முகமாய்
அறியா உறவாய்
பத்தினிகள் வேசம் போட்டது…!
பதறிப்போனது சிட்டு
இது என்ன கோலம்…
கலிகாலத்து மங்கைக்கு ஒப்ப
மலரும் மாறிப்போனதோ
இல்ல…
புதிய உலகம் படைக்க
புறப்பட்டுவிட்டதோ மலர்…??!

சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
“Good Bye…..!”

(யாவும் கற்பனை)

April 2005 (நன்றி யாழ் இணையம்.)

மறுமொழி அளிக்கவும் »

தமிழகத்தின் கறுப்புக் கண்ணாடிக் கள்வனே ஏன் இந்த மெளனம்..??!

(முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அமெரிக்காவில் அஞ்சலி – 2010)

றுப்புத் தான் உன் உடம்பு
மனசு என்னே வெள்ளை..
தமிழகம் ஆள வந்த முதல்வன் நீ
எங்கப்பன் நீயென்று..
கறுப்பா.. கிழவா
உன்னை
நம்பிய ஈழத்து அப்பாவிகள்
எண்ணங்கள்
மரித்த நாள்
மே 18…!

“அன்னை” சோனியாவின்
புன் சிரிப்பில் பொற்குவியல்
கண்டவனே..
மேடைகள் தோறும்
நடிகைகளை குலுங்கவிட்டு
ரசிக்கும்..
கறுப்புக் கண்ணாடிக் கள்வனே..
கவிதையும் கடிதமும்
உன் ஆயுதங்கள்..
அவையே “என் அக்னி ஏவுகணைகள்” என்றாய்
ஈழத்தமிழரை காக்கும் “நாகாஸ்திரம்” என்றாய்
ஆனால்..
அவை சாதித்ததுவோ
தமிழரின் சாவிலும்
உன் குடும்பத்து வாரிசுகளுக்கு
நாற்காலி…!

வீணனே..
குஷ்புவோடு வீணி வடித்தது போதும்
தமிழன் திராவிடன் என்று
தமிழகத்தை கூவி ஏலம் போட்டதும் போதும்..
30 மைல் தொலைவில்
“அன்னை” சோனியா பரிசளித்த
எரி குண்டுகள் வெடிக்க
அமைதி பூத்துக் குலுங்குவதாய்
கதையளக்க ஆளில்லை தேடுகிறோம்..
வா..!

ஈழத்து
கொலைக்களத்தில்
தமிழிச்சி உடல் குதறியவனுக்கு
சிங்கள இனவெறியனுக்கு
தமிழிச்சி கனிமொழியாள்
தன் கரம் பிடித்து பொன்னாடை போர்த்தியது
மறக்கவில்லை லொள்ளனே..
எங்கே உன் கவிதைகள்
வார்த்தைகள் இன்றி செத்துவிட்டனவா..??!
எங்கே உன் கடிதங்கள்
காகிதங்கள் தீர்ந்து
காணாமல் போயினவோ..??!

பொய் பேசும் உன் வாழ்வில்
மெய்யோடு உரிமையோடு
தமிழன் வாழ்வதில் பிடிப்பில்லை
நாம் அறிவோம்..
இன்னும் உன்னை
உலகத் தமிழ் தலைவன் என்று
வணங்குகிறார் சிலர்..
உலகமே முடிவெழுதிய
முள்ளிவாய்க்கால்
தமிழர் இருப்பழிக்கும்
ஓர் படுகொலையே
என்பதை ஏற்க மறுக்கிறாய்
ஏன்..??!

உன்னவள் சோனியா
மனம் கோணிடும் என்றா
ராஜீவ் ஆவி
உன்னை ஆட்டிப்படைக்கும் என்றா..??!
உலக சாதனையாய்
3 மணி உண்ணா நோன்பிருந்தவனே
எதுகையும் மோனையும் கொண்டு
தமிழனை மயக்கி
அரியாசணம் பல கண்டவனே
எங்கே உன் செம்மொழித் தமிழ்
முள்ளிவாய்க்காலுக்கு
ஓர் இரங்கல் கூடவா பாட மறுக்கிறது…???!

ஈவிரக்கம் அற்றவனே
மனிதம் தொலைத்தவனே..
தமிழர் எதிரிகள் முன்
கூனிக் கிடந்து
முதுகு வலி கண்டவனே
இன்று..
முள்ளந்தண்டை நிமிர்த்திக் கட்டி
நாற்காலியில் பவனி வருபவனே
உன்னிடம் தமிழன் என்ற உறவை
கேட்கவில்லை
மனிதன் என்ற உருவில்
உன்னை காண்பதால் கேட்கிறோம்
பெரும் படுகொலையின் அருகில்
வாழ்ந்துமா
உன்னால் அந்த அப்பாவிகளுக்காய்
ஓர் வரியில் அஞ்சலி செய்ய முடியவில்லை
உன் கவிதைகளுக்குக் கூடவா இரக்கமில்லை..!

ஏய் தமிழகமே
நீயும்
இரக்கம் தொலைத்தாயோ…
மனிதமற்ற தலைவர்களை
ஏன் அரியாசணம் ஏற்றி வைத்திருக்கிறாய்..
அந்நியரின் அடிமையாய்
வாழ்வதில் உனக்கொரு மகிழ்வா..!
அந்நிய சுகத்தில்..
தமிழன் என்ற உறவுமா
உனக்கு கசந்திடுச்சு..!
தாய் மண்ணே
சேய் மண் படும் அவலம்
கண்டும் ஏன்
இன்னும் இந்த மெளனம்…??!

1987 இல்
ராஜீவ் படை கொண்டு
தேடி வந்து
அழித்தான் ஈழத்து மண்ணை..!
2009 இல் அவன் சண்டாளி
படைக்கலம் கொடுத்து
இரசாயனம் வீசி அழித்தாள்
மிச்சம் மீதி
ஈழத்தமிழ் இனத்தை..!
இருந்தும்..
இன்னுமா
அவள் பின்..
உங்கள் வாழ்விற்காய்
ஏங்கிக் கிடக்கிறீர்கள்.

தூங்காதீர் தோழரே
மனித வாழ்வு நிரந்தரமல்ல..
இனத்தின் வரலாறு
அது வாழும் வரை நிலைக்கும்.
தமிழன் வரலாறிழந்த
இனம் என்ற
அவப்பெயர் தாங்க வேண்டாம்..
விழித்திடுங்கள் தோழரே தோழியரே..
எம் இனம் தமிழினம்
என்று சொல்லி வாழ்வோம்
சாவுகள் அழிவுகள் உயிர்க்கு புதிதல்ல..
இவ் வையகத்தில்
எமக்கென்றொரு
தனி வரலாறு எழுதி வைப்போம்
வாருங்கள் உறவுகளே
இரக்கமற்ற சுயநலத் தலைமைகள்
அகற்றி..
கரங்கோர்ப்போம்..!

(முள்ளிவாய்க்கால் படுகொலையாளன் ராஜபக்சவிற்கு கருணாநிதி சார்பில் பொன்னாடை -2009)

//படங்கள்: தட்ஸ்தமிழ் மற்றும் இணையம்.//

மறுமொழி அளிக்கவும் »

எரிமலையே ஏன் வெடித்தாய்..??!

முள்ளிவாய்க்கால்
முழங்கிய போது
மெளனித்துக் கிடந்தாரே…
முத்துக்குமார்கள்
தீப் பிடித்து எரிந்த போதும்
சும்மா கிடந்தாரே..
பூமிப்பந்தில்
புனிதராம்
மனித உரிமை காப்பவராம்..
வெள்ளாடு வேடம் போட்டு
சமாதானம் பேசியே
கழுத்தறுக்க
அலையும் அந்தக் குள்ள நரிகள்
அவர் தம்
கொட்டம் அடக்க வெடித்தேன்.

வன்னி மக்களை
சொந்த உறவுகளை
விடுதலை.. எரிமலை என்று
உசுப்பேத்தி..
போர்க்களம் ஏவிவிட்டு
அவர் தம் கதை முடித்து
தாம்
அசைலம் அடித்து..
இன்று…
எதிரி வானில்
அவன் விமானத்தில்
உல்லாசம் போக நினைத்த
ஈனத்தமிழர்களின்
ஈவிரக்கமற்ற
செயல் கண்டு
நெஞ்சு குமுறி வெடித்தேன்..
போட்ட ரிக்கட்டுகளுக்கு
பொக்கட் காசு கூட
கிடைக்கக் கூடாதென்றே.

பூமி துளைத்து
வெடிக்கும் அந்த
பாதகக் குண்டுகள்
செய்து..
சொந்த இனமாம்
மனித இனத்தை அழிக்க
துணை போய் நிற்கும்..
அமெரிக்க ஐரோப்பிய
கணவான்களின்
தூய்மையின் நிறம்
வெண்மை அல்ல..
கருமை என்று
காட்ட வெடித்தேன்..
கரும்புகை துகளெங்கும் பரவி
அவர் வாழ்வின் உண்மை
விம்பம் காட்டி நிற்கட்டும் என்றே..!

நந்திக்கடலிடை
சொந்த உறவுகளை
பாடையேற்றி மகிழ்ந்தவனுக்கே..
போடடா வாக்குகள்
சன நாய் அகம் காட்டுகிறேன்
என்று..
பொய்களைப் பேசி
உயிர்களை ஏய்கும்
ஈனர்கள் செயல்கள் கண்டு
பொறுமை தொலைத்து
குமுறி
வெடித்தேன்…
உலகம் உண்மை
உணரட்டும் என்றே.

தொப்புள் கொடி உறவென்று
தேங்காய் பூவும் புட்டுமென்று..
எத்தனையோ கதை பேசி
ஒட்டி நின்று உறவாடி..
நம்ப வைத்து – பின்
சிங்களத்தின் கொலைக்கரத்தில்
கத்தி ஏற்றி
கூடி நின்று
தமிழ் உறவுகள் உடல்
கிழித்து
குருதி குடித்து
உயிர்களை
வேட்டையாடிய கயவர்கள்
கொடுமையின்
ஆண்டு நினைவை
அகத்துக்குச் சொல்ல வெடித்தேன்
ஓய மாட்டேன்..
என் மடியில்..
இந்தக் கொடுமைகள் அடங்கும் வரை…!

விமானம் செய்து
அதை விற்பனை செய்து
குண்டு செய்து
அதை இனாமாய் கொடுத்து..
உயிர்களை பலியெடுக்கும்
கறுப்புக் கோட் கணவான்களே
வெள்ளைத்தோல் விற்பன்னர்களே..
போதும் உங்கள் கொடுவினை..
தொழில்நுட்பம் கொண்டு
மனிதரை ஏய்த்தீர்கள்
என்னை அடக்க முடியாது..!
புரிந்து கொள்ளுங்கள் புல்லர்களே
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தில்
புழுவிலும் கேடென்று.
பொசுங்கிக் கிடவுங்கள்
என் சீற்றம் அடங்கும் வரை..!
முடங்கிக் கிடவுங்கள்
உங்கள்
கொட்டம் அடங்கும் வரை..!

கண் முன்னாலே
பணக்கார சீமைகளாய் உலா வரும்
உங்கள் கஜானா காலியாகும்..
அது சொல்லும்
உங்கள்
வாழ்வின் போலி நிலை..
ஏய்ப்பு வாழ்வின்
உண்மை நிலை..!
அது வரை
வெடிப்பேன்.. தொடர்வேன்
என்  குமுறலை..!

மறுமொழிகள் (1) »

Follow

Get every new post delivered to your Inbox.